சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள்
சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள் – கமலா கந்தசாமி; பக். 128; ரூ. 60; நர்மதா பதிப்பகம், சென்னை – 17
‘வாழ்க்கையைப் பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது..மரணம் பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள முடியும்?’ – இது “மரணத்துக்கு பின்பான உலகம்’ பற்றிய தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட ஒருவனிடம் சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் கேட்ட கேள்வி. இதுபோன்ற கன்ஃபூஷியஸின் அரிய தத்துவ முத்துகளை உரிய விளக்கங்களுடன் 42 தனித்தனி அத்தியாயங்களாக இந்நூலில் தந்திருக்கிறார் கமலா கந்தசாமி. ஓரிடத்தில் அந்த ஞானி கூறுகிறார், ‘நீ மெüனமாக இருக்கும்போது உனது குற்றம் பற்றி சிந்தனை செய். பிறரது குற்றங்களை விமர்சிக்காதே! மெüனமாக இரு’. இது நம் அனைவரையும் பார்த்துச் சொன்ன சொற்கள் போல் தோன்றுகின்றன. கன்ஃபூஷியஸின் பலமே இதுதான். மனிதனின் மண்ணுலக வாழ்வைச் செம்மையாகவும் நேர்த்தியாகவும் மாற்றுவதற்கான வழி குறித்தே அவரது போதனை கவனம் செலுத்துகிறது. மாறாக, இல்லாத ஒன்றை அவர் துரத்திக் கொண்டு ஓடுவதில்லை. இருப்பதை நிறைவுற ஆக்கும் பணியை மட்டுமே அவர் மேற்கொண்டார். இக உலகில் மனிதன் மனிதனாக வாழ்வதற்குரிய அரிய கருத்துகளை தத்துவமாக முன்வைத்தார் கன்ஃபூஷியஸ். எனவேதான், “நாம் பறவைகளோடும் மிருகங்களோடும் உறவு கொள்ள முடியாது. சக மனிதர்களோடு உறவு இல்லை என்றால், வேறு யாரோடுதான் நாம் உறவு கொள்ள முடியும்?’ என்று அவரால் கேட்க முடிந்தது. நம்மை வழிநடத்திச் செல்ல கன்ஃபூஷியஸ் சிந்தனை ஒரு சிறந்த திறவுகோல். அந்தத் திறவுகோல் பல ஜன்னல்களைத் திறந்துவிடக் காத்திருக்கிறது. அந்த விதத்தில் இந்தப் புத்தகம் மிகுந்த பயன்பாடு கொண்டது. நன்றி: தினமணி, 20.08.2012