மாரிஷஸ் ஹிந்திக் கதைகள்

மாரிஷஸ் ஹிந்திக் கதைகள், தொகுப்பாசிரியர் கமல் கிஷோர் கோயங்கா, தமிழில் மு. ஞானம், சாகித்ய அகாதெமி, பக். 576, விலை 330ரூ.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்த லட்சக்கணக்கானோரை இலங்கை, மொரிஷியஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு கப்பலில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். அப்படி வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், துயரங்கள், சுக துக்கங்கள் பல்வேறு இலக்கிய வடிவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொரிஷீயஸ் நாட்டில் அபிமன்யு அனத், ஜயதத் ஜீவுத், தீபந்த் பிஹாரி, தர்மவீர் கூரா, புஷ்பா பம்மா, பூஜானந்த் நேமா உள்ளிட்ட 28 பேர் எழுதிய 43 சிறுகதைகளை கமல்கிஷோர் கோயங்கா தொகுத்துள்ளார். இச்சிறுகதைகளை மு. ஞானம் தமிழாக்கம் செய்துள்ளார். இத்தொகுப்பு அத்தகைய பதிவுகளில் ஒன்று. இந்தச் சிறுகதைகள் அனைத்தும் மொரிஷியஸ் விடுதலையின் தொடக்கத்திலிருந்து 1999 வரையிலான காலகட்டத்தில் வெளிவந்தவையாகும். ‘உடைந்த சக்கரம்’ என்ற கதையில், மொரிஷியஸ் நாட்டின் 10ஆவது ஆண்டு சுதந்திர தினத்தின்போது குதிரை வண்டிக்காரர் யூசுஃப் பாய்க்கு ஏற்பட்ட நினைவுகள் பகிரப்பட்டுள்ளன. இந்திய வம்சாவளியினர் சூரியன் மறையும் வரை வயல்களில் உழைத்துவிட்டு இரவில் வெகுநேரம் ராமாயணம், புராணங்களைப் படித்ததை’ வாத்தியார் என்ற கதையில் தீபந்த் பிஹாரி பதிவு செய்கிறார். முனீஷ்வர்லால் சிந்தாமணி எழுதிய ‘முட்பாதை’யில் இடுப்பை ஒடிக்கும் வேலை, சற்று உட்கார்ந்தால் சவுக்கடி… என இந்திய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த துன்பங்களையும், ஆயிரக்கணக்கில் சென்றவர்கள் கையாலே காட்டை வெட்டி, கற்பாறைகளை அப்புறப்படுத்தி வயலாக மாற்றியது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மொரிஷியஸில் வாழும் இந்திய வம்சாவளியினரின் வாழ்நிலைக் கூறுகளையும், அடையாளங்களையும் அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களையும் இந்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தினமணி, 5/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *