மாவீரன் மருதநாயகம்
மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்), கொங்கு நூல் பதிப்பகம், சென்னை, விலை 175ரூ.
மருதநாயகம் என்ற வீரனை மாவீரனாக உருவகப்படுத்தும் புதினம். இந்துவாகப் பிறந்த மருதநாயகம் ஒரு முஸ்லிமாக வாழந்து ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணந்தான். எல்லா மதங்களையும் மதித்தான். யூசுப்கானாக மாறி தன் வீர பராக்கிரமத்தால் ஆங்கிலேயரை மிரள வைத்தான். தன்னை மதுரைக்கு கவர்னராக்கிய பிரிட்டிஷாருக்கு விசுவாசத்தையும் விவேகத்தையும் காட்டி ஏமாந்து போனான். தமிழ்நாட்டையே பிரிட்டிஷாருக்கு தாரைவார்த்துக் கொடுத்ததுன் அவன் செய்த மாபெரும் தவறு. பிராய்ச்சித்தம் தேடிக்கொண்டபோது, பக்கத்தில் இருந்தவர்கள் காட்டிக்கொடுத்தார்கள். பயத்தில் இருந்த பிரிட்டிஷார் அவனைத் தூக்கிலிட்டார்கள். மருதநாயகம் வரலாற்றை அலசி ஆராய்ந்து தன் கற்பனையுடன் சேர்த்து தந்துள்ளார் நூலாசிரியர். சோபியா பாத்திரம் கற்பனைப் பாத்திரம் என்றபோதும் அவள் யூசுப்கானுடன் பேசுவாக அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் சுவாரசியம். பிரிட்டிஷாருடனான யூசுப்கானின் இருப்பை, குந்தி தன்னைப் பெற்ற தாய் என்றும் தெரிந்துகூட கர்ணன் துரியோதனன் பக்கம் நின்றதோடு ஒப்பிட்டுப் பேசுவது யூசுப்கானின் தவறை நியாயப்படுத்தும் போக்காக அமைந்துவிட்டது. கற்பனை அதிகம் இருந்துவிட்டால் சரித்திரம் மாறிவிடும். கற்பனையே இல்லாத வெறும் சரித்திரமாக இருந்தால் படிப்பவர்களுக்கு உற்சாகம் இருக்காது. இந்த சரித்திர நாவல் படிப்போருக்குச் சுவையாகவும், சரித்திரம் அறிய விரும்புவோருக்குப் பயனுள்ள வகையிலும் அமைந்திருப்பது சிறப்பு. சில அனுபவமிக்க, பொன்மொழிகளை கதைமாந்தர் கூறுவதாக நூலாசிரியர் ஆங்காங்கே வெளிப்படுத்துவது அவர் எழுத்தாற்றலுக்குச் சான்று. நன்றி: தினமணி, 2/11/2015.