ராஜீவ் காந்தி சாலை

ராஜீவ் காந்தி சாலை, விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 240ரூ.

சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடமன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிகொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல. பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பாரம்பரியமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து விநாயக முருகன் எழுதியுள்ள ராஜீவ் காந்தி சாலை அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான நாவலாகும். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட செம்மஞ்சேரி கிராமத்திற்கு அப்பால் எளிய கிராமிய வாழ்க்கை நிலவியது. இன்று ஆறு வழிப் பாதைகளில் விரையும் வெளிநாட்டுக் கார்கள் வேறு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. ஐ.டி. கம்பெனிகள் அடுக்கு மாடிகளில் வந்தவுடன், காலங்காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்கள் காணாமல் போயினர். பெரிய வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், இறக்குமதியான கார்கள். அழகான இளைஞர்களும், இளைஞிகளும் எனச் சூழலே மாறிப்போனது. கிராமத்தினர் தங்களுடைய விவசாய நிலங்களை விற்றுவிட்டு, மாறிவரும் பண்பாட்டு மாற்றத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரியல் எஸ்டேட்காரர்கள் சிறிய நிலவுடைமையாளர்களைத் தந்திரமாக ஏமாற்றிக் கைப்பற்றிய விவசாய நிலத்தின் மூலம் பெரும் கோடீஸ்வரர்களாக ஆயினர். தங்கவேலு செட்டியார், ஆன்னம், ராசு படையாச்சி போன்றோர் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுச் சிறிய கடைகள் வைத்துப் பிழைக்கின்றனர். குடும்ப உறவுகளின் சிதைவில் மனித மதிப்பீடுகள் சிதிலமடைகின்றன. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற்றும் இளைஞர்களும் உற்சாகமாக இல்லை. எப்போதும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் பணியாற்றுகிறவர்களைப் பயம் நிழலாகத் தொடர்கிறது. நிறுவனங்களில் பணம், அதிகாரப் போட்டிக்காக நடைபெறும் சம்பவங்கள் அலுவலலர்களின் மனஅமைதியை சிதைக்கின்றன. அழகிய இளம் பெண்கள், காதல், குடும்பம் என வாழும் இளைஞர்கள் ஆடம்பர மனநிலையுடன் வாழ முயலுகின்றனர். பத்தாண்டுப் பணியில் முப்பதாண்டு முதுமையை ஏற்படுத்தும் மென்பொருள் கம்பெனியின் வேலைப் பளு பற்றி அழுத்தமான கருத்துகளை விநாயக மூர்த்தி முன்வைத்துள்ளார் சாப்ட்வேர் கம்பெனிகளைச் சார்ந்து வாழும் அடித்தட்டு ஊழியர்கள், கார் ஓட்டுனர்கள் பற்றிய விவரிப்பு ஐ.டி. நிறுவனங்கள் பற்றிய இன்னொரு பிம்பமாகும். ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் ஐ.டி. நிறுவனங்களில் நடைபெறுவதாக மிகைப்படுத்திச் சொல்லப்படும் பாலியல் சீரழிவுகள் பொதுப்புத்தி சார்ந்தவை. ஆண் பெண் சேர்ந்து பணியாற்றுகின்றன பிற நிறுவனங்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் போலத்தான் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் நிகழ வாய்ப்புண்டு. ஆனால் நாவல் முன்னிறுத்தும் பாலியல் சம்பவங்கள் சராசரி மனிதர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். என்றாலும் மனிதர்கள் இப்படியெல்லாம் தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது ஏன் என்று யோசிக்கவைக்கிறது நாவல். வளமான பொருளியல் வாழக்கை, வசதியான வீடு, நட்சத்திர விடுதிகள், அமெரிக்கா பயணம் என வாழும் சாப்ட்வேர்காரர்களின் இன்னொருமுகம் கொண்டாட்டமானது. சாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்டு புதிய தடத்தில் பயணிக்கின்ற இளையதலைமுறையினர் பற்றி நேர்மையாகச் சித்திரிக்காதது நாவலில் பலவீனமான அம்சம். மனப்பிறழ்வடைந்து சாலையில் சுற்றித் திரிவோர், உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்கிறவர்கள் என நாவல் வாழ்வின் இருண்ட பக்கங்களை விவரித்துள்ளது. எல்லாவற்றிலும் அவசரம் என வேகம் வேகமாகத் தேடி அலையும் மனிதர்கள் மனப்பிறழ்வடைவது இயல்பாக நடைபெறலாம் என நாவலாசிரியர் எச்சரிக்கிறார். நகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி கொள்ளவியலாமல், சூழலின் அபத்தம், வெறுமை குறித்துக் காத்திரமான சம்பவங்களை நாவல் முன்வைத்துள்ளது. நானூறு வருடங்களாகக் கடலைத் தபவி விரிந்து கொண்டிருக்கும் சென்னை மாநகரின் பதிவாக ராஜீவ் காந்தி சாலை நாவல் நீள்கிறது எனவும் வாசிக்கலாம். நன்றி: தி இந்து, 26/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *