வரலாறு கற்பித்தலில் புதுமைகள்
வரலாறு கற்பித்தலில் புதுமைகள், வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 320, விலை 200ரூ.
ஆசிரியர் பணிக்குப் படிப்பவர்களுக்காக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின்படி வரலாறு கற்பிப்பதைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல். வரலாறு கற்பித்தலில் புதுமைகள் என்று தலைப்பு இருந்தாலும், கற்பித்தலில் இன்றைய புதுமை எப்படி படிப்படியான வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டது என்பதை நூல் விளக்குகிறது. கிரேக்க, ரோமானிய, இடைக்கால, மறுமலர்ச்சி கால, நவீன கால வரலாற்று எழுத்தாண்மைகளை நூல் விளக்குகிறது. இந்தியாவிலும்கூட கல்ஹனா, அபுல்பஃஸல் காலத்திலிரந்து அர்.சி. மஜும்தார் காலம் வரை எப்படி வரலாறு எழுதப்பட்டது என்பதையும் இந்நூலில் தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழக வரலாற்றை எழுதிய ஆசிரியர்களாக கே.எம்.பணிக்கர், கே.ஏ.நீலகண்டன் சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றோரின் பங்களிப்புகளைப் பற்றியும் நூல் கூறுகிறது வரலாற்று நிகழ்வுகளை ரூசோ, இமானுவேல் காண்ட், ஹெகல், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தத்துவ ஞானிகள் எவ்வாறு பார்த்தார்கள்? என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இவை தவிர நவீன காலத்தில் பல்லூடக வழியில் வரலாற்றை மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிப்பது? வகுப்பறையின் சூழ்நிலை எவ்வாறு இருக்க வேண்டும்? வரலாற்றுக் கல்வியில் ஆராய்ச்சி ஏன் தேவைப்படுகிறது? என்பனவற்றையும் நூல் தெளிவாகக் கூறுகிறது. வரலாறு கற்பிப்பதைப் பற்றிய ஏராளமான செய்திகள் அடங்கிய நூல். நன்றி: தினமணி, 8/12/2014.