அங்கீகாரம்
அங்கீகாரம், கலைமாமணி, பி.ஆர்.துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
இந்நூலாசிரியர் மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், வானொலி நாடகம், டி.வி. தொடர், வசனப் பயிற்சியாளர், தயாரிப்பு நிர்வாகி, ஒருங்கிணைப்பாளர் என்று தனது 55 ஆண்டு கால கலையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர். அந்த அனுபவங்களைத்தான் இந்நூலில் சுவையாகவும், யதார்த்தமாகவும் கூறியுள்ளார். இது சுயவரலாறாக இருந்தாலும், தன்னோடு சம்பந்தப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களைப் பற்றிய நிகழ்ச்சிகள், அவர்களின் பண்புகள், செயல்பாடுகள், அன்றைய சூழ்நிலைகள் போன்றவையும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து, தனது மூத்த சகோதரரால் வளர்க்கப்பட்டு, வறுமையின் காரணமாக பள்ளியில் ஒண்ணாவது வகுப்பு மட்டுமே படித்த இந்நூலாசிர், கலைத் துறையின் இத்தனைத் தளங்களிலும் பிரகாசித்து, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி, எஸ்.வி. சகஸ்ரநாமம் போன்ற மிகப் பிரபலமானவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது சாதனையே. சிறு வயதில் இவர் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது, வறுமை இவ்வளவு கொடியதா என்று நினைக்கத்தோன்றும். அந்த நிலையிலும் தனக்குள் இருந்த மிமிக்ரி திறமையை மனம் தளராமல் மற்றவர்களுக்கு இவர் வெளிப்படுத்திக் காட்டியபோது வியக்கத்தோன்றும். இப்படி பல சம்பவங்களுடன் கலைத்துறையின் பல பிரபலங்களைப் பற்றியும், ஆங்கிலப்படம் ஒன்றில் நடித்த அனுபவத்தைப் பற்றியும் இவர் இந்நூலில் கூறியுள்ளது படிக்க சுவாரஸ்யமானவை. -பரக்கத். நன்றி: துக்ளக், 13/8/2014.
—-
சினிமா ரசனை, அம்ஷன் குமார், சொல்ஏர் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ.
இன்று இந்தியாவில் வாழ்க்கை வரலாறு ஆவணப் படங்களுக்கான ஓர் ஒப்பற்ற கலைஞர் அம்ஷன் குமார் என்றால் அது தவறாகாது. இன்று நம்மிடையே இருப்பவர்கள், மறைந்து போனவர்கள், இசைக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் என பலரைப் பற்றிய ஆவணப்படங்கள் தந்திருக்கிறார். மிகவும் ரசிக்கத்தக்கதாகவும், ஆதாரப்பூர்வமான தகவல்களோடும் அவை நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவருடைய ஆவணப்படங்கள் விழா இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் நிகழ்ந்திருக்கின்றன. இவருடைய சினிமா ரசனை என்ற நூல், எல்லாவிதமான படங்கள் மீதும் அவருக்கு இருக்கும் தேர்ச்சியைத் தெரியப்படுத்துகிறது. பொழுதுபோக்கு ரசிகனிலிருந்து நிபுணன் வரை எல்லோருக்கும் இவர் நூல் தெளிவு தரும். நன்றி: குங்குமம், 11/8/2014.