அங்கீகாரம்
அங்கீகாரம், கலைமாமணி பி.ஆர். துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ.
தமிழகத்தின் பழம்பெரும் நாடகக் கம்பெனியான எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேஜில் பணியாற்றியவர் கலைமாமணி பி.ஆர். துரை. அவர் இந்த நூலில், தனது நாடக உலக அனுபவங்களை சுவை குன்றாமல் தொகுத்து அளித்துள்ளார். 18 தலைப்புகளில் இவரின் அறுபது ஆண்டு கால கலை உலக வாழ்க்கை அனுபவங்கள், பழம் பெரும் நாடக, திரையுலக நடிகர்களின் சுவையான அனுபவங்களையும் சேர்த்தே தாங்கியுள்ளது. 1957 முதல் 61 வரை பாய்ஸ் கம்பெனியில் இவர் பணியாற்றிய தகவல்களும், பின்னர் 63 முதல் இவர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜில் பணியில் சேர்ந்ததும் என இவரின் நாடக அனுபவங்கள் விரிந்து நிற்கின்றன. சீனா போர் நேரத்தில் சிங்கநாதம் கேட்குது என்ற ஓரங்க நாடகத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தில், நடிகர் சிவாஜி கணேசன் அது நாடகமானபோது நடித்ததைக் குறிப்பிடுகிறார். அதில் சிவாஜி இவரது நடிப்பைப் பாராட்டியதைக் குறிப்பிடுகிறார். ஒருமுறை சிவாஜியின் வகுப்புத் தோழர் ராயப்ப கவுண்டர் இவரைப் பாராட்டி, யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொள் என்று ரூ. 100 கொடுத்ததையும் அதை தலையணைக்கு அடியில் வைத்து 15நாள் தான் படுத்துக்கொண்டதையும், ஒரு நாள் இது முதலாளிக்கு தெரிந்து விட்டதால் தான் பயந்ததையும் குறிப்பிடும் துரை, அந்தப் பணத்தை சமையல்காரனிடம் கொடுத்து, சேவா ஸ்டேஜ் ஊழியர்கள் 60பேருக்கும் சாம்பார் செய்து போடு என்று அவர் சொன்னதையும் அதனை அன்று சாப்பிட்ட அனைவரும் தன்னையே நன்றியுடன் பார்த்ததையும் நினைவு கூர்கிறார். அந்த அளவுக்கு நாடக நடிகர்கள், நாடக கம்பெனிகள் அந்தக் காலத்தில் வறுமையில் இருந்ததை இவரது பல வாழ்க்கைச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பழைமையான நாடக அனுபவங்களை அறிந்து கொள்ள விழையும் அன்பர்களுக்கு இது ஒரு காலப் பெட்டகமாகத் திகழ்கிறது என்பது கண்கூடு. நன்றி: தினமணி, 7/7/2014.
—-
அடித்தட்டு மக்கள் உயர, கவிஞர் எம்.எஸ். செபாஸ்டியன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 75ரூ.
சமுதாயத்தை மேம்படுத்துவதடன், அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கும் வகையில் அடிதட்டு மக்கள் உயர்வு, இமயச்சுனாமி, எதுசுதந்திரம், அவ்வைப்பாட்டி உட்பட 101 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பாகும். கவிதைகள் படிப்பதன் மூலம் நாட்டு நடப்புகளை சிந்திக்க தூண்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 9/7/2014.