அசோகனின் வைத்தியசாலை
அசோகனின் வைத்தியசாலை, நடேசன், மகிழ் வெளியீடு, பக். 402, விலை 300ரூ.
புதிய உலகின் வாழ்க்கைப் புலம் புத்தம்புதிய கதைக்களத்தில் பயணிக்கும் இந்நாவல் மூலம் புலம்பெயர் எழுத்தாளர்களில் நடேசன் கவனமீர்க்கிறார். கலிங்கத்தை வெற்றி கொண்ட அசோக சக்கரவர்த்தியே உலகில் முதலாவது மிருக வைத்தியத்தை தொடக்கி வைத்தவர் என்கிறது வரலாறு. ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை நம்மூரில் வளர்ப்பதைப்போல ஏதோ எப்படியோ என்று யாரும் வளர்ப்பதில்லை. அவற்றின் மீது பொழிகின்றன அன்பும் எடுக்கின்ற கரிசனையும் நாம் நம் சகமனிதர்களுக்குக் கொடுப்பதையும்விடப் பல படிகள் மேலானது. அங்கே மிருகங்களுக்கிருக்கும் உரிமைகளும் வசதிகளும்கூட அப்படித்தான். அசோகன் காட்டிய அன்பையும் விட, கருணையும்விட ரொம்ப அதிகம். ஆஸ்திரேலியாவிலிருக்கும் டாக்டர் நடேசன் எழுதியிருக்கும் மூன்றாவது நாவலான அசோகனின் வைத்தியசாலையில் இதையெல்லாம் அனுபவமாகப் பார்க்கலாம். மனிதர்களுக்கும் பிராணிகளுக்குமிடையிலான உறவையும் வாழ்வையும் நடேசன், ரொம்ப நுணுக்கமாகச் சித்தரிக்கிறார். இதில் வரும் கொலிங்வூட் என்ற பூனை வெறுமனே ஒரு பிராணியல்ல. அது பேசும் பூனையாக இந்த நாவலின் மையப்பாத்திரங்களில் ஒன்றாக, இந்த நாவலை நகர்த்திச் செல்லும் மையப்புள்ளியாக உள்ளது. கொலிங்வூட், அந்தரங்கமாக எல்லாவற்றையும் அறிந்துணரும் வல்லமையோடு படைக்கப்பட்டுள்ளதால் மையப் பாத்திரமான சிவா சுந்தரம்பிள்ளையை வழி நடத்திச் செல்லும் உணர்திறனை வழங்குகிறது. ஆஸ்திரேலிய வாழ்க்கை முற்றிலும் வேறானது. அதன் சவால்களும் வேறானவை. இலங்கையிலும் இந்தியாவிலும் மிருக வைத்தியத் துறையில் அனுபவத்தைப் பெற்றிருந்தாலும் ஆஸ்திரேலிய மிருக வைத்தியத் துறையில் அது முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சட்டங்களும் நடைமுறைகளும் மனித உறவுகளும்கூட வேறுபட்டிருக்கின்றன. சிவா சுந்தரம்பிள்ளையின் எதிர்பார்ப்புகளையெல்லாம் சுக்குநூறாக்குகிறது. வாழ்க்கை சுலபமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலை, நெருக்கடிகளின் முன்னே நிறுத்தப்படுகிறது. இந்த வேறுபாடுகளோடு எப்படி தன்னைப் பொருத்திக்கொண்டு நிலைப்பட முடியும்? அதன் சவால்கள் என்ன? என்று சிவா சுந்தரம்பிள்ளை தவிப்பதையும் மனித இயல்பின்படி சூழலின் விதி சிவா சுந்தரப்பிள்ளையைத் தகவமைப்பதையும் நடேசன் நாவலில் காட்சிப்படுத்துகிறார். இன்றைய புதிய உலகில் ஒழுங்கில் கட்டவிழும் பண்பாடும் வாழ்க்கையும் இப்படித்தான் புதிய புதிய எல்லைகளை நோக்கி விரியத் துடிக்கின்றன. அப்படி புதிய எல்லைகளை நோக்கி விரியத் துடிக்குந்தோறும் பிரசவ வலியைப்போல இரத்தப் பெருக்கும் வலியும் ஏற்பட்டே தீரும் என்று நாவலின் காட்சிகளில் காண்கிறோம். இப்படி இந்த நாவல் புதிய திணையொன்றில், கட்விழும் வாழ்க்கையையும் பண்பாட்டையும் பேசுகிறது. ஆனால் அசோகனின் வைத்தியசாலை நாவலில் வரும் புலம் நாமறிந்த புலமல்ல. புதிய உலக ஒழுங்கில் புதிதாக தமிழுக்கு அறிமுகமாகி வரும் புலம் இது. ஆகவேதான் இது புதியதொரு திணையாகவும் உள்ளது. மிருகங்களைப் பற்றியும் மிருக வைத்தியசாலையில் ஒரு நாவல் களமாகியிருப்பதைப் பற்றி தமிழில் அறியமுடியவில்லை. தமிழ் வாழ்வு அமைந்திராத பிறத்தியான வாழ்க்கை களமொன்றில், புதிய நிலப்பகுதியொன்றில் பிராணிகளின் வாழ்வையும் மனித வாழ்க்கையையும் இணைக்கும் நாவலொன்றை இதற்கு முன் தமிழில் அறியவில்லை நாம். மிருகங்களின் நோயுலகத்துக்குச் சமானமாக ஓடுவது இந்த வைத்தியசாலை ஊரியர்களின் உள்ளரசியல். காமமும் பொறாமையும் தொழில்போட்டியும் புரிதலின்மைகளும் நட்பும் கலந்து உருவாகும் ஒரு விளையாட்டாக அது நாவலின் உடலெங்கும் விரிகிறது. ஒவ்வொருவருக்கும் ஓர் ஆளுமையை, வாழ்க்கைப் புலத்தை, வரலாற்றப் பின்னணியை முன்வைக்கிறது நாவல். எளிய உறவு விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்த சித்தரிப்பு நாவல் விரிவ விரிய ஆஸ்திரேலியாவின் சமூக அரசியல் வாழ்க்கையின் சித்திரமாகத் தென்படுகிறுது என நாவலுக்கு ஜெயமோகன் எழுதிய முன்னுரையில் குறிப்பிடுவிது உண்மைதான். உலகில் எங்கே சென்றாலும் ஏதோ வகையில் சிக்கல்களும் முரண்களும் போட்டிகளும் பிரச்சனைகளும் ஒதுக்கல்களும் நட்பும் நேசமும் துரோகமும் ஒடுக்கதலும் போராட்டமும் இருந்தே தீரும் என்ற உண்மை இந்த நாவலின் வலுவான சாட்சியம். ஈழத்திலருந்து திக்கெட்டும் சென்று கலைச்செல்வம் கொண்டு வரும் புலம் பெயர்ந்த படைப்பாளிகளில் நடேசன் முதல் வரிசைப் படைப்பாளியாகிறார். -முத்து மலைச் செல்வன். நன்றி: இந்தியா டுடே, 24/12/2014.