ஜாதியற்றவளின் குரல்
ஜாதியற்றவளின் குரல், ஜெயராணி, கருப்பு பிரதிகள், தலித் முரசு, பக். 357, விலை 250ரூ.
பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில் ஜாதி வெளி, கண்டதேவி சூழ்ச்சி, இன்னுமா இந்துவாக இருப்பது போன்ற கட்டுரைகள், வாசகனின் மனசாட்சியோடு உரையாடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்து எழுதுவோர், அவர்களின் உள் முரண்பாடுகளை விமர்சிப்பதில்லை என்ற கருத்து உண்டு. அந்த கருத்தை இந்த புத்தகம் உடைக்கிறது. தலித் இலக்கியம், அரசியல் போன்றவற்றை அறிய விரும்புவோரின் பட்டியலில், இந்த புத்தகம் கட்டாயம் இருக்கலாம். நன்றி: தினமலர்,15/1/2015.
—-
நினைவுகளின் நகரம், ராஜா சந்திரசேகர், நதி பதிப்பகம், பக். 144, விலை 100ரூ.
எளிய சொற்களின் மூலம், புதுப்புது உலகங்களை அறிமுகப்படுத்துபவை, ராஜா சந்திரசேகரின் கவிதைகள். மழை முடிந்த மாலையில் தெரியும் வானவில்போல், அனுபவங்கள் இவரது கவிதைகளில் காணலாம். ‘ஒதுங்கியபோது பழைய நண்பனின் ஞாபகம் வந்தது; பின் நிற்கும் வரை, மழை நண்பனாக இருந்தது’ ‘நன்றி சொல்லலாம் என கடவுளை பார்க்கப் போனேன். நன்றிக்குள் கடவுள் ஒளிந்திருந்தார்’ போன்ற கவிதைகள் குறிப்பிடத்தக்கன. வாசகனை மிரட்டாத மொழிநடை; இயல்பான சொற்கள்; கவிதைகளில் புதிய தரிசனம். இதுதான் அவரது படைப்புகளின் தன்மை. இலக்கியத்தின் புதிய உலகத்தை அறிய விரும்புவோர், இந்த நூலை தேர்ந்தெடுக்கலாம். நன்றி: தினமலர்,15/1/2015.