அச்சுவெல்லம்
அச்சுவெல்லம், பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 145, விலை 176ரூ.
சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக உருப்பெறுகின்றன. அந்த வகையில் பா. முருகானந்தம், 15 சிறுகதைகளை, அச்சுவெல்லம் எனும் தலைப்பில் சிறுகதைகளாக தொகுத்து அளித்துள்ளார். தலைப்பு கதையான, ‘அச்சுவெல்ல’த்தில் பண்ணையார் வீட்டிற்கு போகும் ஒவ்வொரு அச்சுவெல்லத்திலும், கரிகாலன் கலக்கும் ‘பதம்’, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் மிக அழுத்தமாக படைக்கப்பட்டுள்ளது. ‘முதுகு வலி’ கதையில், ‘உடம்பில் இயல்வு நிலையிலேர்ந்து மாறுபட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மீண்டும் சரியாகற வரைக்கும் அதோடயே வாழ பழகிக்கிறது நல்லது’ என்ற டாக்டரின் மந்திர சொற்கள் வாழ்வியல் யதார்த்தம். ஒவ்வொரு சிறுகதையும் ஒரு இனிய இசைபோல் ரீங்காரமிடுகிறது. -சசி பிரபு. நன்றி: தினமலர், 8/2/2015.
—-
தமிழ் இலக்கிய வரலாறு, எஸ். ஸ்ரீகுமரா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.648, விலை 300ரூ.
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் நூலாக விளங்குகிறது இந்த நூல். அகத்தியம் முதல், இணைய தமிழ் வரை, விரிந்த பரப்பில் எழுதப்பட்டு இருக்கிறது. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் முதலான தற்கால இலக்கிய வரலாற்றுத் தொகுப்பு, விரிவாக அமைந்துள்ளது. தமிழுக்கு வழங்கப்படும் பல்வேறு விருதுகளையும், விருது பெற்றோர் பட்டியலையும், முயன்று தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர். பெண்ணியம், தலித்தியம், மொழிபெயர்ப்பு தமிழ், தொல்லியல் தமிழ், ஆட்சி தமிர் என, தமிழின் பல்வேறு பரிணாமங்களை, அழகாக இந்த நூல் வெளிப்படுத்தி உள்ளது. வேடர் குலம் சார்ந்த குகனையும், விலங்கினம் சார்ந்த சுக்ரீவனையும், எதிரியன் தம்பியாகிய வீடணனையும், தன் தம்பிகாளக ராமன் ஏற்றுக்கொண்டதை காட்டி, ஜாதி வேறுபாடற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை கம்பர் நம் கண்முன் காட்டி மகிழ்கிறார்” (பக். 127). -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 8/2/2015.