அடைமழை
அடைமழை, ராமலக்ஷ்மி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், விலை 100ரூ.
நடுத்தர வர்க்கத்திற்கு மிக அருகில் இருக்கக்கூடிய எழுத்து சமீப காலங்களில் அருகிவிட்டது. நடுத்தர வர்க்கமும் அவர்களுக்கான எழுத்தாளர்களும் காட்சி ஊடகங்களுக்கு மாறிவிட்டார்கள் என்று நினைத்த தருணத்தில் காட்சி தருகிறார்கள் ராமலக்ஷ்மி போன்ற எழுத்தாளர்கள். மிக சுவாரஸியமான நடையில், சிறந்த சிறுகதைகளை வழங்கியிருக்கிறார் ராமலக்ஷ்மி. வாழ்வின் அபத்தங்கள் முரண்பாடுகள், உறவுச் சிக்கல்களை மிக நயமாக தனது கதையில் எடுத்துக்காட்டிச் செல்கிறார் ராமலக்ஷ்மி. ஒவ்வொரு கதையிலும் முதல் வரியிலேயே கதை ஜிவ்வென பயணிக்கத் துவங்குகிறது. அதனால் முதல் வரியை படித்த பிறகு அவ்வளவு எளிதாக இந்தத் தொகுப்பை கீழே வைக்க முடியாது. பழைய நினைவுகள் தரும் இதமான அனுபவம், நகர்ப்புற சந்தடியிலிருந்து தப்பியோடும் நிறைவேறா ஆசை, நகர்ப்புறத்தின் வேகமான வாழ்க்கையில் நிகழும் சுரண்டல்கள் என பல உணர்வுகளை, முரண்பாடுகளைத் தொட்டுச் செல்கின்றன இவரது கதைகள். ஒரு சில கதைகளின் களம் நீளம் ஒரு பிரச்சனையாகத் தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சிறந்த கதைகளின் தொகுப்பு என்பது மறக்க முடியாதது. பெண் பெயரில் எழுதும் ஆண் எழுத்தாளர்களை அதிகம் கொண்ட ஒரு இலக்கியச் சூழலில் இது போன்ற அசலான பெண் எழுத்துக்களை பதிப்பிக்கும் அகநாழிகை பதிப்பகம் பாராட்டுக்குரியது. -எஸ். செந்தில் குமார். நன்றி: ஃபெமினா, 1/10/2014.
—-
ஐ.சி.ஐ.சி.ஐ அதிசய மனிதர் கே.வி. காமத், ஜீவா சங்கரன், ராஜராஜன் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
இந்திய வங்கிகளுக்கு முன்னுதாரணமாக உருவெடுத்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கிய கே.வி. காமத்தின் வாழ்க்கையையும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் வளர்ச்சியையும் விரிவாக அலசும் நூல் இது. நன்றி: ஃபெமினா, 1/10/2014.