அடை மழை

அடை மழை, ராமலக்ஷ்மி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-197-4.html

எழுத்தாளர் ராமலக்ஷ்மி பன்முகத் திறன் கொண்டவர் என்பதைத் தமது முதல் சிறுகதைத் தொகுப்பிலேயே அடையாளப்படுத்தியிருக்கிறார். அழகியலோடு இவர் எடுத்த புகைப்படமே இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அடைமழை புத்தகத்தின் அட்டைப் படமாகி அலங்கரிக்கின்றது. அடை மழையில் 13 சிறுகதைகள் நனைந்திருக்கின்றன. மேல்தட்டு, கீழ்தட்டு உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, சவால்களை மிக மிக யதார்த்தமாய், எளிய நடையில் கிராமிய மணத்தோடு எழுதியிருக்கிறார். ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. வயலோடு விளையாடியில் கிராமங்கள் நகரங்களாக மாறி வருவதைக் கவலையோடு எழுதியிருக்கிறார். ஈரம் சிறுகதையில் காசு சம்பாதிக்கும் மிஷின்களாகிக் கொண்டிருக்கும் பெண்களின் கையாலாகாத் தனத்தையும், அவர்கள் படும் அவமானங்களையும் மிகத் துல்லியமாகக் காட்டியிருக்கிறார். பொட்டலம், அடைமழை கதைகளைப் படிக்கும்போது பார்வையை மறைக்கிறது கண்ணீர். பாசத்தில் வரும் மாரி போன்ற கணவன் வாய்த்தால் ஒவ்வொரு பெண்ணும் உயிர்த்தெழுவாள். இத்தொகுப்பின் அத்தனை பாத்திரங்களும் தினந்தோறும் நம்மோடு பயணிக்கும் சக மனிதர்களாய் தோன்றுகிறார்கள். எனவே கதையும் நம்மோடு பயணிக்கிறது. அடைமழை, ஆசிரியரின் முதல் தொகுப்பு என்ற அடையாளம் எங்கும் காண முடியவில்லை. அவர் தேர்ந்தெடுத்துள்ள கதைக்களமாகட்டும், சின்னச் சின்னத் தலைப்புகளாகட்டும், யதார்த்தமான வாழ்க்கை உணர்வுகளைக் காட்டும் வார்த்தைகளாகட்டும் இயல்பான நடையில் இருக்கிறது. படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு இது. நன்றி: கல்கி, 6/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *