அவமானம்
அவமானம், மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு, தமிழக்கம்-ராமாநுஜம், பாரதி புத்தகாலயம், பக். 96, விலை 60ரூ.
மண்ட்டோ நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக் குழுவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் தொகுப்பு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தின் அவலங்களை, துயரங்களை, கொடுமைகளை நேரில் கண்டு வெம்பியவர் மண்ட்டோ. அவரது சிறுகதைகளில் மிகுந்த துயரம் குடி கொண்டிருக்கும். பெண்கள் எந்த அளவுக்குக் கொடுமைக்குள்ளானார்கள் என்பது வெளிப்படும். மனிதாபிமானம் வெளிப்படும். அவர் அவற்றை வெளிப்படுத்தியவிதம் ஆபாசமானது என்று நீதிமன்றம் வரை இழுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தாண்டி இத்துணைக் கண்டத்தின் சிறந்த எழுத்தாளராக மிளிர்கிறார் மண்ட்டோ. இத்தொகுப்புக்கு முத்தாய்ப்பாக வரும் அங்கிள் சாம்க்கு மண்ட்டோ கடிதம் என்ற கட்டுரையில் அடங்கியிருக்கும் செய்தியும், ஏளனமும் படித்து ரசிக்க வேண்டியவை. நன்றி: புதிய புத்தகம் பேசுது, 1/4/2014.
—-
ரித்விக் கட்டக், தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி, புதிய கோணம், பக். 128, விலை 80ரூ.
ஐம்பது வயது வரை சோகங்களை மட்டுமே சுமந்து கொண்டு, தன் காதல் மனைவியையும், மகனையும் பிரிய நேரிட்டு, தனிமையின் கொடுமையில் மரணத்தைத் தழுவிய இந்தக் கலைஞனின் படைப்புகள் எட்டுத் திரைப்படங்கள் மட்டுமே. கட்டக் அவற்றை உருவாக்கிய போது அவை தோல்வியையே தழுவின. அவரது மரணத்துக்குப் பிறகுதான் அவரது மேதமை இனங்காணப்பட்டது. மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட இவரின் சோகம் அவரைக் கட்சியும் நிராகரித்ததே. எனினும் நாடகக் கலைஞனாக இப்டாவில் செயல்பட்டுள்ளார் கட்டக். புனே திரைப்படக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி சிறப்பான ஆசிரியராகத் திகழ்ந்திருக்கிறார். இக்கலைஞனின் வாழ்க்கை வரலாறு இப்புத்தகத்தில் வடிவக்கப்பட்டுள்ளது. பாரதி புத்தகாலயத்தின் புதிய கோணம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அறிஞர் சு. கிருஷ்ணமூர்த்தி வங்காளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: புதிய புத்தகம் பேசுது, 1/4/2014.