தனிநாயக அடிகளாரின் படைப்புகள்
தனிநாயக அடிகளாரின் படைப்புகள், தொகுப்பு-தவத்திரு தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழாக்குழு, பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-143-6.html
இலங்கை, யாழ்ப்பாணத்துக்கு அருகில் பிறந்த தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி அவருடைய படைப்புகளின் அரிய தொகுப்பு ஒன்றை வெளியிட்டு மொழிக்கும் பண்பாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அடிகளார் ஒன்றே உலகம் என்னுந் தலைப்பில் தாம் பயணம்போய் வந்த 21 நாடுகளைப்பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை இன்றைய தலைமுறையினர் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும். பொழுதுபோக்காக ஊர் சுற்றிப் பார்ப்பதைவிட ஆவணப்பதிவாக அடிகளார் எழுதியுள்ள பயணக்கட்டுரைகள் மிகுந்த மதிப்புடையவை. இரண்டு லட்சம் மைல்களுக்கு மேல் தாம் விமானப் பயணம் மேற்கொண்டிருப்பதாக ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார் அடிகள். தம்முடைய முதல் பயணம் எட்டு வயதுச் சிறுவனாகக் கட்டுமரத்தில் ஊர்காவல்துறையிலிருந்து நெடுந்தீவுக்குத் தொடங்கியது என்பதையும் எழுதுகிறார். கம்போதியாவைப் பற்றி அடிகளார் எழுதியுள்ள கட்டுரையில் அதன் கலைச்சிறப்புக்களை வியப்பதோடு மேல்நாட்டு வரலாற்றையும் பண்பாட்டையும் வலியுறுத்திக் கீழைநாட்டு வரலாற்றினைப் பொருட்படுத்தாத கல்வித் துறைகளைச் சாடவும் செய்கிறார். தென் அமெரிக்கப் பயணத்தின்போது கலைப் பொருள்களை விற்கும் செவ்விந்தியப் பெண் ஒருத்தி விற்பனை செய்தது நிஜமான மனிதத்தலை ஒன்றின் சுருங்கிய வடிவமாம். எட்டு ஒன்பது அங்குல நீள அகலமுள்ள மனிதத்தலையை மூன்று நான்கு அங்குல அளவில் சுருக்கக்கூடிய கலை கற்றவர்களாம் அவர்கள். தமிழ்த்தூது என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள எட்டுக் கட்ரைகளும் வெகு அருமையான பயன்பாட்டுக்குரியவை. ஹவாய்த்தீவு மக்கள் கண்ணியும் மாலையும் தாரும் கோதையும் அணிந்து வந்து விருந்தினர்களுக்கும் மாலைசூட்டி வரவேற்றபோது சங்க இலக்கிய காலத்தின் நினைவு தம்மையறியாமலே தமக்குத் தோன்றியதாக எழுத அடிகளாரால் மட்டுமே முடியும். அழகான விலை மதிப்பற்ற தொகுப்பு இது. தமிழுக்கு ஈழம் தந்த கொடை தனிநாயகம் அடிகளார் என்பதை நூலின் ஒவ்வொரு பக்கமும் பேசுகிறது. நன்றி:கல்கி, 27/4/2014.
To buy this Tamil book online: