ஆகஸ்ட் 15
ஆகஸ்ட் 15, குமரி எஸ். நீலகண்டன், சாய் சூர்யா, 204/432, டி7, பார்சன் குரு பிரசாத் காம்ப்ளக்ஸ், டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18, பக்கங்கள் 502, விலை 450ரூ.
சென்னை வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர் ஒரு சிறந்த படைப்பாளி, இவரது கதை, கட்டுரை, கவிதைகள், பிரபலமான அனைத்து இதழ்களிலும், இணை தளங்களிலும் வெளியாகியுள்ளன. இந்திய சுதந்திரத்தை நினைவுகூரும் தலைப்பிலான இந்நூல் நிஜமும், கற்பனையும் கலந்த ஒரு புதினம். இதில் வரும் கல்யாணம் என்ற பாத்திரம் நிஜமானது. ஆகஸ்ட் 15, 1922ல் பிறந்த கல்யாணம், மகாத்மா காந்தியின் தனிச் செயலாளராக இருந்தவர். காந்திக்குப் பின் சர்வோதய இயக்கத்தில் ஆசார்ய வினோபாபாவுடனும், ஜெயப்ரகாஷ் நாராயணுடனும் தீவிரப் பணியாற்றியவர். பூரணமான காந்தியவாதி. அடுத்தது, ஆகஸ்ட் 15ல் பிறந்த சத்யா என்ற ஒரு சிறுமியின் பாத்திரம். இது கற்பனை பாத்திரம். இவற்றோடு 1947 ஆகஸ்ட் 15ல் பிறந்த சுதந்திர இந்தியாவிலுள்ள மக்களின் வாழ்க்கையும் பின்னிப் பிணைத்து புதிய உத்தியல் இன்டர்நெட்டிற்குள் சென்று படிப்பதுபோல் இந்த நாவல் இயற்றப்பட்டுள்ளது. கல்யாணம் அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களோடு இதுவரை வெளிவராத காந்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல அரிய சம்பவங்களும், அத்துடன் நமது நாட்டின் அரசியல், பாரம்பரிய கலாச்சாரங்களும் இன்றைய இந்திய வாழ்க்கைச் சூழல்கள் போன்ற பல விஷயங்களும் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது சிறப்பானது. – பரக்கத். நன்றி: துக்ளக்.