பெருந்திணைக்காரன்
பெருந்திணைக்காரன், கணேசகுமாரன், உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வளாகம், கருமண்டபம், திருச்சி 1, பக்கங்கள் 88, விலை 60ரூ.
ஓர் இசைக் கருவிக்குள் வாயுவாகப் புகுந்து இசையாக வெளிப்படும் காற்றைப்போல… மனதின் இண்டு இடுக்குகளில் புகுந்து உணர்வுகளை மொழி வடிவில் வெளிக்கொண்டு வருகின்றன கணேசகுமாரனின் கதைகள். பெருந்திணைக்காரன் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 12 கதைகளும் அக மனதின் உணர்வுகளை நுட்பமாகப் பேசுபவை. இளம் வயதில் இருந்தே தனது ஆதர்ஷமாக இருந்து தன் ஆளுமையைத் தீர்மானித்த சித்தப்பா இறந்துவிட்டார். அவரது சடலம் கிடத்தப்பட்டு இருக்கிறது. எவ்விதச் சலனமுமின்றி மூடியிருந்த கண்களுக்குள் கண்ட கடைசி பிம்பம் என்னவென்று அவர் கண்களைப் பிரித்துப் பார்க்கும் ரகசிய ஆசை இவனுக்குள் கிளர்ந்தது என்று அதைப்பற்றி எழுதுகிறார். சாவு டடின் விவரணையில் எட்டிப் பார்க்கும் கவித்துவ மொழி உறுத்தலாக இல்லை. மாறாக, இந்தத் தொகுப்பின் தனித்துவமாகவும் பலமாகவும் இருப்பது கணேசகுமாரனின் இந்த மொழிதான். தன் கதை மாந்தர்களின் மனதுக்குள் புகுந்து உளவியல்பூர்வமாக அணுகுகிறார். மழைச்சன்னதம் என்றொரு கதை. மனப் பிறழ்வுள்ள ஒரு தாயின் வாழ்க்கையைக் கொண்டாட முடியாத அந்தத் தாய்மையின் அவலத்தை, சங்கிலியிட்டுக் கட்டிவைக்க வேண்டிய யதார்த்தத்தை அவர் விவரிக்கும் விதம் கதையோடு நம்மை இணைத்துக்கொள்கிறது. மொத்தக் கதைகளிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, கொம்பன். காலம்தோறும் மனிதர்கள் தங்களின் வீரத்தை நிரூபிப்பதற்காக யானை என்னும் பிரமாண்ட உயிரை எப்படி எல்லாம் சித்ரவதை செய்துவருகிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் முக்கியமான பதிவு இது. சங்ககாலத்தில் துவங்கி தண்வாளக்காலம் வரை வரலாற நெடுகிலும் மனித குலம் யானைகளின் எதிரிகளாகவே மாறிவிட்டிருக்கும் அநீதிக்கு எதிராகத் தன் எழுத்தை முன்வைக்கிறார். தொகுப்பின் அனைத்துக் கதைகளிலுமே நம்மை ஈர்ப்பது வேறுபட்ட கதை சொல்லும் உத்திதான். ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு முறையில் சொல்கிறார். அது நம்மை ஈர்க்கிறது. நான் சகாயம் என்ற கதையின் முன்பின் கதை சொல்லும் பாங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு கதை சொல்லியாக கணேசகுமாரன் தேர்ந்தெடுக்கும் தருணங்கள் அந்தரங்கமானதாக இருக்கும் அளவுக்கு அபூர்வமானவையாக இல்லை. ஆனாலும் தன் தனித்துவமான மொழி மற்றும் கதை சொல்லும் உத்தியால் தனக்கான இடத்தைப் பிடிக்கிறார் கணேசகுமாரன். நன்றி: ஆனந்தவிகடன், 13 பிப்ரவரி 2013.