வீரம் விளைந்த தமிழ் பூமி
வீரம் விளைந்த தமிழ் பூமி, இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 150, விலை 100ரூ.
தன் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக தன் இன்னுயிரை நீத்து சரித்திரம் படைத்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் அவர்களில் பலரின் வீரம் பதிவு செய்யப்படாமலேயே கிடக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல் அதிக பிரபலமானவர்களே திரும்பத் திரும்ப வெளிச்சம் போட்டுக்காட்டப்படும் சூழல் நிலவுகிறது. எத்தனையோ சாமானயிர்கள் அடித்தட்டு மக்கள் சிந்திய ரத்தம் வீரப்பதிவு பெறாமலேயே மறைந்துபோகும் அவலம் நடந்தேறிவருகிறது. மாவீரன் ஒண்டிவீரன், வீரன் பகடை, விருப்பாச்சி, கோபால் நாயக்கர் போன்றோரின் வீரம் போதிய அளவில் எடுத்து சொல்லப்படாமலேயே உள்ளன. அத்தகைய தேடல்தான் இந்நூல். வெளிச்சத்திற்கு வராத தமிழ்நாட்டு வீரர்களின் வரலாறு பல இந்நூலின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
—–
மானுட வெளிச்சம், செங்குட்டுவன், விடியல் ஒளி பண்ணை, 211அ, எழில்நகர், கோவை சாலை, கரூர், பக்கங்கள் 184, விலை 100ரூ.
கடவுள் மனிதனுக்குக் கூறிய புத்திமதி கீதை. மனிதன் கடவுளுக்குக் கூறிய புத்திமதி திருவாசகம். மனிதன் மனிதனுக்குக் கூறிய புத்திமதி திருக்குறள். அந்த திருக்குறள் வழி வாழ்வோம் என்று வழிகாட்டுவதுதான் செங்குட்டுவனின் மானட வெளிச்சம். அதற்குத் துணையாக வருவது பெரியாரின் சீடராக அவர் வாழ்ந்த வாழ்க்கை. உன்னையே நீ நம்பு என்பதுதான் இந்தப் புத்தகத்தின் மைய இழை. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று கட்டுரை தொடங்கி, திராவிடம், பெரியார், அண்ணா உள்ளிட்ட பல கட்டுரைகளின் வழி மூடநம்பிக்கைகளை தோலுரித்துக் காட்டுவதுதான் நூலின் பிரதான வேலை. மொத்தத்தில் வெற்றி என்பது தன்னம்பிக்கையோடு உழைத்தால்தான் கிட்டும். மூடநம்பிக்கையால் அல்ல என்பதை பொட்டில் அடிப்பதுபோல் கூறும் நாவல். நன்றி: குமுதம், 13, பிப்ரவரி 2013.
—–
குமுதம் ஒரு பக்கக் கதைகள் (தொகுதி 1), குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-4.html
குமுதம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஒரு பக்கக் கதைகள்தான். அதன் பலமும் அதுதான். பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள் எழுதினார்கள். அதைத் தொடர்ந்து வாசகர்கள் பலரை சிறுகதை எழுத்தாளர்களாக உருவாக்கிய பெருமை குமுதத்திற்கு உண்டு. இப்போது குமுதம் ஒரு பக்கக் கதைகள் என்ற தலைப்பில் குமுதம் பு(து)த்தகம் வெளியிட்டு இருக்கும் கதைகள் 2009-2010 வாக்கில் வெளியானவை. இதில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையது என்பதாக உள்ளன. எளிய நடை, எதிர்பாராத திருப்புமுனை, கதை எதைப் பற்றியது என்பதை முதல் ஐந்து வரிகளிலேயே உணர்த்திவிடும் பாங்கு, குழப்பமில்லாத கதை, நாயகன், நாயகி அறிமுகம், கதை மாந்தரே எதிர்பார்க்காத முடிவுகள், நறுக்குத் தெறித்த வார்த்தைகள், சின்னஞ்சிறிய விஷயங்கள், அவற்றில் எழும் பிரச்னைகள், படிக்கும் வாசகனை புதிய முடிவை நோக்கித் தேடிப் போகவைக்கும் உத்தி இவை எல்லாமே இந்த ஒரு பக்கக் கதைகளில் இருப்பதால் எந்த கதையையும் ஒதுக்காமல் படிக்க முடிகிறது. சிறுகதைகள் எழுத விரும்புகிறவர்கள் குமுதம் ஒரு பக்கக் கதைகளைப் படித்தாலேபோதும், கண்டிப்பாக உங்களாலும் சிறுகதை எழுத்தாளராக உரவெடுக்க முடியும். அடுத்தடுத்த தொகுதிகள் வெளிவர உள்ளன. நன்றி: குமுதம், 20 பிப்ரவரி 2013.