உயிரே உயிரே
உயிரே உயிரே (நூலாசிரியர்: மாலன், வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25 – ஏ, அன், பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை -600 032, பக்கம்: 168, விலை: ரூ.160)
காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை, சினிமாவிலும் கானல் நீராய் கண்ட காதலுக்கு, இந்த நூல் உண்மைக் கண்ணீரால் விடை சொல்கிறது. வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த காதலை, வர்ணனையே இல்லாமல் சம்பவமாக மாலன் சுவைபட எழுதியுள்ளார். ஜின்னா அழுதது இருமுறை தான். ஒன்று இஸ்லாமியர் அல்லாத பார்சி இன பெண், ‘ருட்டி’ இறந்தபோது, மற்றொன்று பாகிஸ்தானில் குடியேற இந்தியாவை விட்டு வெளியேறிய போது, நேருவிற்கும், கமலாவிற்கும் திருமணம் முடிந்தும் ஆனந்த பவனத்தில் ஆரண்ய வாசமாக இருவரும் இருந்தனர். ஹிட்லர் ஜெலியின் முரட்டுக் காதல், இசை அரசர் பீத்தோவன் ஜோசப் சங்கீதக் காதல், காதல் தடயங்கள் ஆகியவை வாசகரை வசீகரப்படுத்துகின்றன. – மா.கி.ரமணன். நன்றி: தினமலர் (10-3-2013).
—-
நாளூம் நாளும் நல்லாசிரியர் , வெ. கணேசன்; தமிழிழ்: வீ.கே. கார்த்திகேயன்; பக். 408; ரூ.250; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98;
ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறையை உருவாக்குபவர்கள். மிகவும் வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆசிரியர்கள் தங்களை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்கு உரிய சிந்தனைகளை இந்நூலின் மூலமாக வழங்குகிறார் நூலாசிரியர். ‘வகுப்பில் பாடம் நடத்தத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு தொடங்கவும். ஏனென்றால் அமைதியாயிருப்பது, அமைதியற்ற மனத்தை அமைதிப்படுத்தும்’. ‘வாய்ப்புகள் கிடைக்கின்ற போதெல்லாம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.படிப்பு உங்களை வெற்றியாளாராக்கும். புத்தகப்படிப்பில்லாமல் போனால் நமது பணி சிறக்காது’ . ’நீங்கள் திசைகாட்டும் கருவிபோலச் செயல்படுங்கள் என்பது நாம் செல்லும் திசையை நோக்கிய ஒருமுகச் சிந்தனை வளர்க்கச் சொல்லப்படும் வாசகம்… திசை மாறாமல் நம் சென்று அடைய வேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்டி நினைவூட்டிக் கொண்டே இருக்கும் தன்மையுடையது திசைகாட்டும் கருவி’. இப்படி நல்ல சிந்தனைகளை ஒவ்வொரு நாளும் ஆண்டு முழுவதும் சிந்திக்க உதவும் வகையில் தொகுத்தளித்திருக்கும் அருமையான நூல். ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பயன்படும் நூல். நன்றி: தினமணி (11-3-2013).
—-
வெற்றி வழிகள் – அனிதா போக்லே, ஹர்ஷா போக்லே; தமிழில்; இலங்கோ கண்ணன்; பக். 208; ரூ. 95; விகடன் பிரசுரம், சென்னை -2; To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-0.html
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லேவும், அனிதா போக்லேவும் சேர்ந்து எழுதியதுதான் ‘வெற்றி வழிகள் விளையாட்டுகற்றுத்தரும் நிர்வாகம்’ என்ற இந்தப் புத்தகம். வழக்கமாக வெற்றி தொடர்பாக வெளிவரும் புத்தங்கள் வெற்றிகளைக் குவித்த சாதனையாளர்கள் பற்றியும், அவர்கள் எப்படி சாதித்தார்கள் என்பதையும் நமக்குக் காட்டுவதாக இருக்கும். ஆனால் இந்தப் புத்தகம் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் எப்படி நிர்வாக ஆற்றலை வளர்ப்பது? தலைமைப் பண்பை எப்படி வளர்ப்பது? என்பது பற்றி நமக்குக் கற்றுத்தருகிறது. போட்டி நிறைந்த உலகில் வெற்றி பெற எந்த மாதிரியான மாற்றங்களைச் செய்யவேண்டும், குறைகளைக் களைவது மற்றும் புதுமையைப் புகுத்துவ தன் அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. நன்றி: தினமணி (11-3-2013).