ஆங்கிலேயர் இல்லாத இந்தியா
ஆங்கிலேயர் இல்லாத இந்தியா, பிரெஞ்சு மொழியில் பிரயர் லோட்டி, தமிழில் சி.எஸ். வெங்கடேசன், சந்தியா பதிப்பகம்.
மதுரை மீனாட்சி அம்மனின் நகைகள் எத்தனை பிரான்சு நாட்டைச் சேர்ந்த, பிரயர் லோட்டி என்ற யாத்திரீகர், பிரஞ்சு மொழியில் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள, ஆங்கிலேயர் இல்லாத இந்தியா என்ற பயண நூலை சமீபத்தில் படித்தேன். சி.எஸ். வெங்கடேசன் மொழிபெயர்த்துள்ள இந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த 1899ல் இலங்கை அனுராதபுரத்தில் துவங்கி, காசி வரை பயணம் செய்து, இந்த பயண நூலை, லோட்டி எழுதியுள்ளார். இந்தியா தொடர்பாக, நமக்குக் கிடைக்கும் ஆவணங்களில் லோட்டியின் பயணநூலும் முக்கியமானது. நாகர்கோவில், திருவாங்கூர் சமஸ்தானம், மதுரை, ஸ்ரீரங்கம், புதுவை போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பயணம் செய்து, ஐதராபாத் வழியாக வடநாட்டுக்குச் சென்று உள்ளார் லோட்டி. தன் பயண நூலில், அவர் சென்ற இடங்களில் நிலவிய தமிழர்களின் வாழ்வின், நுட்பமான பகுதிகளை பதிவு செய்துள்ளார். குறிப்பாக வாழ்க்கை முறை, அவர்கள் பின்பற்றிய மத வழிபாடுகள், ஜாதிய முறைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மன்னர் பிராமணர் வைஷ்ணவர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற ஜாதிய அடுக்கு முறைகளைக் குறிப்பிட்டு, அவர்கள் என்ன வேலை செய்தனர் என்பதையும் சொல்கிறார். வேளாண் முறை சாகுபடி செய்த பயிர்கள் என்னென்ன, அவை ஏன் அந்தப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டன என்பது குறித்தும் எழுதியுள்ளார். திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு சென்ற அவர், அங்குள்ள கோவில்களுக்குச் சென்றபோது, அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என, அனுமதிக்கவில்லை. ஆனால் திருவாங்கூர் ராஜாவிடம் பெற்ற கடிதத்தை கொண்டு வந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருவறை மற்றும் பொக்கிஷ அறை ஆகியவற்றை அவர் பார்த்துள்ளார். மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் குறித்த பட்டியலை, இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். வேறு மதத்தினர் என்பதால், திருவிதாங்கூர் சமஸ்தானம், அவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த ராஜா கொடுத்த கடிதத்தை ஏற்று, மீனாட்சி அம்மன் கோவில் நகைகளை லோட்டி பார்வையிட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கு நடந்த அலங்காரத்தை, எட்டு மணிநேரம் நேரில் பார்த்து அப்படியே வர்ணித்துள்ளார். லோட்டியின் இந்நூல் நூறு ஆண்டுகளுக்கு முன் நம் மூதாதையரின் வாழ்க்கையை விளக்கும் ஆவணமாக உள்ளது. -வெண்ணிலா. கவிஞர். நன்றி: தினமலர், 19/10/2014.