ஆசைக்கிளியே அழகிய ராணி
ஆசைக்கிளியே அழகிய ராணி, அனுராதாரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
480க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 365க்கு மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர் அனுராதா ரமணன். கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, கதையை வேகமாகக் கொண்டு செல்வதில் வல்லவர். அதனால்தான் இவருடைய 4 நாவல்கள் தமிழிலும், ஒரு கதை தெலுங்கிலும், ஒரு கதை கன்னடத்திலும் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றிவாகை சூடின. ஆசைக்கிளியே அழகியராணி, உனக்காக உமா, குயில் வேட்டை ஆகிய மூன்று நாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. மூன்று கதைகளையும், முக்கனிகளுடன் ஒப்பிடலாம். வழக்கமான முத்திரையை இக்கதைகளில் ஆழமாகப் பதித்துள்ளார் அனுராதா ரமணன். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.
—-
தமிழர் இலக்கியமும் சமூக அரசியலும், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 80ரூ.
தமிழறிஞர் க.ப. அறவாணன் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எனினும் எல்லாக் கட்டுரைகளிலும் அடிநாதமாக ஒலிப்பது தமிழ்ப்பற்றே. சிதம்பரம் கோவிலில் எழுந்தறியுள்ள இறைவன் பெயர் ஆடல் வல்லான் என்று அப்பரின் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பிற்காலத்தில் நடராஜன் என்று மாற்றப்பட்டது. இதேபோல் தூய தமிழில் அழைக்கப்பட்ட பல ஊர்களின் பெயர்களும் மாறிவிட்டன. ஹோமரின் இலியட் என்ற நூலையும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரையும் சிந்தனைக்கு நல்விருந்து. நன்றி: தினத்தந்தி, 14/1/2015.