ஆட்சித்தமிழ் வரலாற்று நோக்கு
ஆட்சித்தமிழ் வரலாற்று நோக்கு, மு.முத்துவேலு, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 176, விலை 90ரூ.
சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆட்சிமன்றம், நிர்வாகம், நீதித்துறைகளில் தமிழ் பயன்படுத்தப்பட்டு வரும்விதம் குறித்துப் பேசும் நூல். சோழர் காலத்தில் கூற்றம், கோட்டம், நாடு, வளநாடு மண்டலம் என்று நிர்வாக அடிப்படையில் நிலப்பகுதிகள் பிரிக்கப்பட்டன. அப்போது கழஞ்சு, பாட்டம், கூலிர முத்தாவணம், மேரை, காணம் என்ற தமிழ்ப் பெயர்களில் விற்பனை வரி வசூலிக்கப்பட்டு வந்தன என்று எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். சங்க காலம் ஆட்சித் தமிழின் பொற்காலம் என்று கூறும் நூலாசிரியர், பல்லவர் காலத்திலிருந்தே தமிழில் வடமொழி கலக்கப்படுவது நிகழ்ந்து வருகிறது என்கிறார். ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்பும் வேற்றுமொழி பேசுபவர்களின் ஆட்சியில் தமிழகம் இருந்து வந்திருக்கிறது. ஆனால் அத்தகைய சூழ்நிலைகளிலும் ஆட்சி மொழியாகத் தமிழே நீடித்து வந்தது. ஆனால் 1956இல் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டும் இதுவரை சட்டப் பேரவை, நீதித்துறை நிர்வாகத்துறையில் முழுமையாகத் தமிழைக் கொண்டு வர முடியவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய நிகழ்வு என்கிறார் நூலாசிரியர். சிறிய நூலாயினும், தமிழ வளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் நூல். நன்றி: தினமணி, 9/4/12.
—-
திருக்குறளில் கிறித்தவ அறம், இராணி பிரகாஷ், சவுந்திரா பதிப்பகம், 28, நான்காவது குறுக்குத்தெரு, குறிஞ்சி நகர், அரக்கோணம், விலை 70ரூ.
காலத்தால், மொழியால், சமயத்தால் வேறுபட்ட பல நூல்கள் தோன்றினாலும், பைபிளிலும், திருக்குறளிலும் உள்ள பல அறக்கருத்துக்கள் ஒன்று போலவே காணப்படுகின்றன. குறள்களில் காணப்படும் பல போதனைகள் பைபிளின் வார்த்தைகளோடு இயைந்து போவதை ஆச்சரியப்படும் விதத்தில் ஒப்புமைப்படுத்துகிறார் நூலாசிரியர். அன்புடைமை, விருந்தோம்பல், செய்ந்நன்றியறிதல், அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நாவடக்கம் உள்ளிட்ட 21 பல்வேறு தலைப்புகளில் இடம்பெற்ற குறள்களை குறிப்பிட்டு அவற்றுக்கு சரியான விதத்தில் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் பின்புலக் கதைகளை, வசனங்களை தரும்போது ஆசிரியரின் அக்கறையான தேடல் பிரமிக்க வைக்கிறது. தினத்தந்தி