ஆன்மிக வினா விடை (ஐந்தாம் பாகம்)
ஆன்மிக வினா விடை (ஐந்தாம் பாகம்), சுவாமி கமலாத்மானந்தர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் – 641020, விலை 70 ரூ.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற ஆன்மிக மாத இதழில் 2000 முதல் 2004 வரை வெளியான ஆன்மிக வினா-விடைகளின் தொகுப்பே இந்நூல். இதற்கு முன் வெளியான இந்நூலாசிரியரின் நான்கு பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதை முன்னிட்டு, ஐந்தாம் பாகமாக இந்நூல் வெளியாகியுள்ளது. இதுவும் ஹிந்து மதம் பற்றிய பொது அறிவு நூலாகும். இந்த நூலில் இறைவன், ஹிந்து மத தெய்வங்கள், மகான்கள், ஆன்மிகச் சாதனைகள், ஹிந்து மதச் சம்பிரதாயங்கள், ஒழுக்கம், அறம் போன்ற அடிப்படை விஷயங்களும், அவை குறித்த வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஆசிரியர் அறித்துள்ள பதில்களும் எளிமையானவை. அப்பதில்களில் புராணங்கள், இதிகாசங்கள், ஞானிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி விளக்கியிருப்பது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. மனிதனுக்கு ஆன்மிகம் ஏன் தேவை? மனிதன் இறைவன் ஆக முடியுமா? ‘முக்தி’ என்றால் என்ன? இறைவனுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுவது ஏன்? 63 நாயன்மார்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன? சில கோயில்களில் ஆடு, கோழிகளைப் பலியிடுகிறார்களே, இது சரியா? இப்படி சுமார் 630க்கும் மேற்பட்ட கேள்விகளுக்குரிய விடைகள் சுமார் 360 பக்கங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. – பரக்கத் நன்றி: துக்ளக் 28/09/11