இசைத்தமிழ்
இசைத்தமிழ், க. வெள்ளைவாரணனார், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலை நிர்வாகக்குழுவினர் வெளியீடு.
தமிழிசை மரபை பறைசாற்றும் இசைத்தமிழ் காலச்சென்ற க. வெள்ளைவாரணனார் எழுதிய, இசைத்தமிழ் என்ற நூலை, அண்மையில் படித்தேன். சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலை நிர்வாகக் குழுவினர் இந்நூலை, 1979ம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். முத்தமிழில் ஒன்றான இசைக்கு, மிக முக்கியமான ஒரு நூலாக இசைத்தமிழ் உள்ளது. இலங்கையைச் சேர்ந்த, இசை மேதை வமுலானந்தா, 1947ம் ஆண்டு எழுதிய, யாழ் நூலுக்கு, முன்னுரை எழுதியவர் வெள்ளைவாரணனார். வமுலானந்தாவின், மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை வைத்து, தமிழகத்தில் நீண்ட அரசியல் நடந்து வந்தாலும், தமிழ் இசைக்கு சொல்லும்படியான ஆதார நூல்கள் பெருமளவில் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் தமிழ் இசைக்கு நீண்ட வரலாறு உண்டு. தன்னிச்சையான மரபை தமிழ் இசை கொண்டுள்ளது என்பதை, இசைத் தமிழ் நூல் பறைசாற்றுகிறது. ஒன்பது அத்தியாயங்களை கொண்டது இந்நூல். ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சிதம்பரம் அண்ணாமலை செட்டியார் வரை, இசைத் தமிழின் பாரம்பரியம், அதன் வளர்ச்சி ஆகியவற்றை, பல்வேறு இலக்கிய சான்றுகளோடு, இசைத் தமிழ் நூல் எடுத்துரைக்கிறது. தேவாரம், திருவாசக பாடல்களில் பயன்படுத்தப்பட்ட பண் குறித்தும், வெள்ளைவாரணனார் விளக்குகிறார். இசையோடு, தமிழ் இலக்கணத்தையும் சேர்த்து விவரிப்பது மிக அரிதானது. ஆனால் வெள்ளைவாரணனார், இவ்விரண்டையும் சேர்த்து செய்துள்ளார் என்பது பிரமிக்க வைக்கிறது. தமிழ் இசைப் பாடல்கள் மட்டும் அல்லாமல், பண்டைய காலந்தொட்டு, பயன்படுத்தப்பட்ட தமிழ் இசைக் கருவிகள் குறித்தும், புகைப்படங்களோடு இந்நூல் விளக்குகிறது. இதோடு நில்லாமல், இசைக் கருவிகள் எப்படி செய்யப்பட்டன. அவற்றுக்கு பயன்படுத்தப்பட்ட உலோகம், மரம், தோல் ஆகியன குறித்தும் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது. தமிழ் இசைக்கு, இந்நூல் ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது. வெள்ளைவாரணனார் நூல்களை தமிழக அரசு, நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், இசைத் தமிழ் உள்ளிட்ட அவருடைய நூல்கள், மறுபதிப்புகூட செய்யவில்லை என்பது வருந்தத்தக்கது. இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் அவா. -ரவிக்குமார், எழுத்தாளர்-முன்னாள் எம்.எல்.ஏ. நன்றி: தினமலர், 24/8/2014.