இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும்

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும், மா.ந. திருஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 270, விலை 120ரூ.

தமிழர்களின் ஐவகை நிலங்களுக்குரிய தெய்வம், உணவு, பறவை, மலர், பண், தொழில் போன்றவற்றை விரிவாகப் பட்டியலிடுவதில் தொடங்கி சங்க காலத்தில் இசைத்தமிழ், சோழர்கள் காலத்தில் தமிழிசை, தமிழிசை வளர பாடுபட்டவர்கள், கூத்துக்கலையின் வகைகள், நாடகக்கலையை வளர்த்தவர்கள், நாடகத்தால் வளர்ந்தவர்கள், நாடக சபாக்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஆப்ரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியார், பாரதியார், பாரதிதாசன், கண்மணி தேசிக விநாயகம் பிள்ளை, கே.பி. சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் தமிழிசைக்கு ஆற்றிய பணிகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. நாடகக்கலை பற்றிய கட்டுரையில் காசி விசுவநாத முதலியார் கி.பி. 1871 ஆம் ஆண்டு வேத சமாஜம் என்னும் அமைப்பின் மூலம் அரங்கேற்றிய டம்பாச்சாரி விலாசம், பிரம்ம சமாஜம் என்னும் அமைப்பின் மூலம் அரங்கேற்றிய தாசில்தார் ஆகிய நாடகங்களே தமிழில் முதன் முதலில் மராத்திய, பார்சி நாடக முறைகளைத் தழுவி அரங்கேறிய நாடகங்களாகும் என்பதும், பம்மல் சம்பந்த முதலியாரின் நண்பரான மயிலை கந்தசாமியின் முயற்சியில் உருவானதே மனோகரன் பாத்திரம் என்பதும் மயிலை கந்தசாமியால் குணசித்திர நடிகர்களாக உருவாக்கப்பட்டவர்கள் கே.பி. காமாட்சி பி.யூ. சின்னப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம் போன்றவர்கள் என்பதும் உண்மையிலேயே அரிய தகவல்களாகும். விபுலானந்தரின் யாழ் நூல் பற்றிய கட்டுரையும் கவி. கா.மு. ஷெரீஃப் பற்றிய கட்டுரையும் சிறப்பானவை. தண்டபாணி தேசிகர், அண்ணாமலை ரெட்டியார் போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகள் மிகவும் சிறியதாகிவிட்டதால் அவர்களைப் பற்றிய தகவல்கள் அதிகம் இல்லை. தமிழிசை, நாட்டியம், நாடகம் ஆகிய துறைகளின் தொடக்க கால வரலாற்றை அறிய இந்நூல் உதவும். நன்றி: தினமணி, 15/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *