தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
தூக்கிலிடுபவரின் குறிப்புகள், சசி வாரியார், தமிழில்-இரா. முருகவேள், உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638366, ஈரோடு மாவட்டம், விலை 140ரூ.
இந்தியாவில் வேறெப்போதையும் விட தூக்குதண்டனைக்கு ஆதரவான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. மக்கள் கொடூரமான குற்றங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் மரண தண்டனைதான் ஒரே தீர்வு என்று கூக்குரலிடுவதைக் கேட்கிறோம். ஆனால் அவர்கள் மரணதண்டனை என்றால் என்னவென்று புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் 117 பேரை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஜனார்த்தனன் பிள்ளையின் வாக்குமூலத்தை சசி வாரியர் இந்த நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். மனதைச் சில்லிட வைக்கும் அனுபவங்கள் இந்த நூல் நெடுக விவரிக்கப்படுகின்றன. மனிதன் அடைந்த அத்தனை நாகரிக வளர்ச்சியும் ஒரு மனிதன் தூக்கிலிடப்படும்போது சேர்ந்தே தூக்கிலிடப்படுகிறது. ஒரு மரண தண்டனையை நிகழ்த்துவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடூர அனுபவம். தூக்குக் கைதியின் கண்களில் எதைப் பார்ப்பீர்கள்? என்று கேட்கப்படுகிறது. அந்தக் கண்களில் ஒருபோதும் குற்றம் சாட்டும் தொனியைக் கண்டதே இல்லை என்கிறார் அவர். கண்மூடித்தனமாக மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் ஒரே ஒரு முறை தங்கள் மனசாட்சியிக் கதவுகளைத் தட்டிக்கொள்ள இந்த நூலைப் படிக்க வேண்டும். நன்றி: குங்குமம், 14/1/13.
—-
காஞ்சிக்கதிரவன், கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 250ரூ.
தமிழ் எழுத்துலகில் நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம் என பல துறைகளில் தன் படைப்புத்திறனை வெளிப்படுத்திய முனைவர் கோவி. மணிசேகரன் சின்னத்திரை மற்றும் பெரிய திரையிலும் தன் காலடியை பதித்துள்ளார். இவர் எழுதிய குற்றாலக்குறவஞ்சி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்து உள்ளது. தமிழின் பெருமையை உலக வரலாற்றில் பேச வைக்கும் வரிசையில் இப்போது வெளிவந்திருக்கும் நூல் காஞ்சிக் கதிரவன். 32 அத்தியாயங்களாக எளிய நடைமுறையில் பிரித்து எழுதி இருக்கிறார். இந்த நாவல் படிக்க, படிக்க ஒரு உற்சாகத்தை வரவழைக்கிறது. மகேந்திர பல்லவன்தான் கதாநாயகன், அவனே காஞ்சிக்கதிரவன். அஜந்தா என்பவன் கோவியாரின் கற்பனை பாத்திரம், காவிய பேரழகி, மாவீர மகேந்திரனும், பேரழகி அஜாந்தாவும் கொண்ட காதல், கதைப்பின்னல், பழமுதிர்ச்சோலை மலையில் இறங்கி வரும் சிலம்பாறு போன்ற நடை இவை அனைத்தும் படிப்பவர்களை கரும்பின் சுவைக்கு கொண்டு செல்கிறது. எப்போது படித்தாலும் காலத்தை வெல்லும் இந்த காதல் சாம்ராஜ்யம் மனதில் நிலைத்து நிற்கும். நன்றி: தினத்தந்தி, 17/7/13