பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 154, விலை 80ரூ.

வானம் பார்த்த பூமியில் குடியானவர்களுக்கும், ஆடுமாடுகளும் படும்பாட்டை மானாவாரி மனிதர்கள் என்ற படைப்பாக தந்தவரின் அடுத்த அனுபவம்தான் பூர்வீகபூமி. உழைக்க சளைக்காத சிறுசிறு விவசாயிகள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தங்கள் விவசாயத்தையும் தொழிலையும் விட்டுவிட்டு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வீணாய்ப்போகும் நிலங்களை விளைநிலமாக மாற்றும் பொருட்டு அங்கே குடிபோகிறார்கள். பாடுபட்டவர்கள் பலனை அனுபவிக்கும் முன்பே காவிரிப் பிரச்னை பூதாகரமாகி, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்படுகிறது. உழைத்த அத்தனையையும் விட்டுவிட்டு குற்றுயிராக தம் பூர்வீகம் நோக்கி ஓடி வரும் அவல நிலையை கொங்குமண்டல விவசாயிகளின் வாழ்வியல் சித்திரத்தை, உள்ளது உள்ளபடி படம் பிடிக்கப்பட்ட நாவல் இது. நன்றி: குமுதம், 24/7/13.  

—-

 

ஹேமாலயம், எழுத்துவடிவம்- எஸ். பால அமுதா, மதி நிலையம், 2/3, 4வது தெரு, கோபாலபுரம், சென்னை 86, பக். 288, விலை 250ரூ.

சாஷே ஷாம்புவை தயாரித்து அனைவரும் வாங்கக் கூடிய வகையில் சிறு பிளாஸ்டிக் உறைகளிலிட்டு வழங்கி இந்தியாவில் முதன்முறையாக அதை அறிமுகப்படுத்திய ஆற்றலே டாக்டர் ஹேமாவின் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. டாக்டர் ஹேமா சின்னிகிருஷ்ணன் தன் வாழ்வில் சந்தித்த பிரச்னைகள், அவற்றை அவர் வெற்றிகொண்டது. கணவரிடம் இருந்த மரியாதை. சத்யசாய்பாபாவிடம் ஏற்பட்ட பூரண நம்பிக்கை, மழலைக்கல்வி, பள்ளிகள் தொடங்க எடுத்துக் கொண்ட ஆர்வம், தன் பிள்ளைகளை கல்விமான்களாகவும், தொழிலதிபர்களாகவும் உருவாக்கிய தாய்மைத் திறன், மற்றவர்களுக்கு உதவும் மனிதநேயம் இப்படி டாக்டர் ஹேமாவின் பண்பு நலன்கள் ஒவ்வொன்றும் அவரது வெற்றிப் படிக்கட்டுகளாக அமைந்ததை தன் வரலாறாக கூறுகிறார். படிக்கப் படிக்க தன்னம்பிக்கை வளர்கிறது. புதிய சக்தி பிறக்கிறது. நன்றி: குமுதம், 24/7/13.  

—-

 

செள்ளு, செல்வராஜ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 96, விலை 60ரூ.

கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைக் கிராமங்களில் வாழும் முக்குவர் என்ற மீன்பிடித்து வாழும் சமுகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை இச்சிறுகதைத் தொகுப்பு பதிவு செய்கிறது. இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கும் மணல் கம்பெனிகள், அதனால் மீனவச சமூகம் சந்திக்கும் பிரச்னைகள், குடிப்பழக்கம், வரதட்சணை, புற்றுநோய் போன்ற சமூகத் தீமைகளால் மீனவ குடும்பங்கள் எப்படி சின்னா பின்னமாக்கப்படுகின்றன என்பதை செல்வராஜ் முக்குவர் மொழியிலேயே இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்லி அந்த சமூகத்தோடு ஒன்ற வைக்கிறார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 24/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *