முடிவுகள் முடிவானவை அல்ல
முடிவுகள் முடிவானவை அல்ல, டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அச்சகம், 29/ஏ-8 தெற்கு கால்வாய்க்கரைச் சாலை, சென்னை 28, பக். 116, விலை 50ரூ.
அலைபாய்கின்ற மனம் முடிவு எடுக்க இடர்ப்படும். மனதைத் திடப்படுத்தி முடிவெடுத்தல் என்பது ஒரு கலை. இது காலம் காலமாக இந்திய தத்துவ அறிஞர்கள் பேசம் விஷயம். ஆனால் நடைமுறை யதார்த்தங்களுடன் ஆசிரியர் இதை விளக்கியிருப்பது சிறப்பானது. எல்லா முடிவுகளுக்கும் மாற்று முடிவுகள் இருக்கின்றன என்பதை நடைமுறை வாழ்வில் ஏற்படும் அனுபவங்களை வைத்து தனித்தனித் தலைப்புகளில் ஆசிரியர் இயல்பாக விளக்குகிறார். முடிவுகள் எடுக்கும்போது தப்பித்தல் காரணமாக அமைவது சரியல்ல என்றும் எச்சரிக்கிறார். காற்றடிக்கும் திசையில் பறக்கும் காற்றாடிப் பயணம் இலட்சியப்பயணம் அல்ல என்ற உண்மையும் இதில் கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டும் அல்ல, நண்பனையும் எடைபோட வழிஉண்டா என்ற வாதத்திற்கு பதில், பணம் இல்லாதபோது படும் அவஸ்தை, அதே சமயம் அதிகப் பணத்தால் வரும் ஆபத்துக்களை நினைவில் வைத்து செயல்படவேண்டும் என்று ஆசிரியர் கூறுவது அனைவரையும் சிந்திக்க வைக்கும் வித்தியாசமான நூல். -பாண்டியன். நன்றி: தினமலர், 20/11/11
—-
பளிச் பரிகாரங்கள், ஹரிகேசநல்லூர வெங்கட்ராமன், கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங்ஸ், 47, NPஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, பக். 96, விலை 50ரூ.
நாளை என்பது எனக்கு எப்படி இருக்கும்? அதில் நன்மை நடக்குமா? கெட்டது நடக்குமா? கனவில் பாம்பு வருவது முதல் அரச மரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்குமா வரை மனித வாழ்க்கையின் அன்றாட சந்தேகங்களை வாசகர்கள் கேட்க, கேட்க அவையெல்லாம் ஏன் நடக்கிறது? இவற்றிற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதை பிரபல ஜோதிடர் ஹிரிகேசநல்லூர் வெங்கட்ராமன் கல்கி இதழ் மூலம் வாராவாரம் அளித்து வந்த பதில்களின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவர் தரும் பளிச் பரிகாரங்கள் மனநிம்மதியையும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருவனவாக உள்ளன. நன்றி: குமுதம், 27/3/13.