கம்பன் அன்றும் இன்றும்
கம்பன் அன்றும் இன்றும், பேராசிரியர் கு. ராமமூர்த்தி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 304, விலை 230ரூ-
நூலாசிரியர், பேராசிரியர் கு. ராமமூர்த்தி கம்ப ராமாயணத்தை நன்கு கற்றுணர்ந்து, அதில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. இராவணனுடைய மகனான மேகநாதன் என்ற இந்திரஜித்தின் வீரத்தை, இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் போர்த் தளபதியாகத் திகழ்ந்த ஜெனரல் ரோமலின், வீர வாழ்வோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ள முறை, வியக்க வைக்கிறது. ராமன் நல்ல தலைவன் என்ற பகுதியில், ராமனிடம் எல்லா வகை நற்பண்புகளும் குடி கொண்டுள்ளன என்பதை அழகுற விளக்குகிறார். ஆங்காங்கே, கம்பனின் பாடல்களைப் பொருத்தமுறக் கூறும் விளக்கம் நன்று. மனித உறவுகள் மேம்படவும், மனித குலப் பண்பாடுகள் வளரவும், கம்ப ராமாயணப் பாத்திரங்கள் வாயிலாக, கம்பரி கூறும் கருத்துக்களும், அறிவுரைகளும் மக்களை நல்வழிப்படுத்தும் என்பதை ஆசிரியர் சிறப்பாக விளக்கியுள்ளார். ராமன் நல்ல தலைவன், கம்ப ராமாயணம் நல்ல காப்பியம். இக்கருத்தை விளக்கும் இந்த நூல் நல்ல நூல். -பேரா. ம. நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 14/7/13.
—-
சின்ன சின்ன மின்னல்கள், சிராஜுல் ஹஸன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 12, பக். 128, விலை 50ரூ.
யார் வெற்றியாளர்? இறை நம்பிக்கை, நற்செயல்கள், சத்தியத்தை எடுத்துரைத்தல், பொறுமையை அறிவுறுத்தல் இந்த நான்கு பண்பும் எவரிடம் இருக்கிறதோ, அவற்றின் அடிப்படையில் யார் செயல்படுகிறார்களோ அவர்தான் உண்மையில் வெற்றியாளர் என்றுஇறைமறை குர் ஆன் இல் இருந்து மின்னலாய் கருத்துக்களைப் பொழியும் ஓர் அழகான நூல். சமூகம், அரசியல், ஆன்மிகம், குடும்பம் உள்ளிட்ட நடப்பியல் வாழ்வின் யதார்த்தங்களை எந்த ஒப்பனையும் போலித்தனமும் இன்றி பேசும் நூல். இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல எம்மதத்தினரும் கடைப்பிடிக்கக் கூடிய கருத்துக்கள் நிறைந்திருப்பது நூலின் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 27/3/13.