இடைவேளை
இடைவேளை, ஆர். வெங்கடேஷ், நேசமுடன், விற்பனை-வேத பிரகாசனம், 142, முதல்மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-624-3.html
இன்றைய வாழ்க்கை என்பது ஏதோ ஒரு வேலை என்பதாக மாறிவிட்டது. ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி ஆயிரக்கணக்கான அடித்தட்டுக் குடும்பங்களை மேல் தட்டுக்கு உயர்த்தி இருக்கிறது.ஆனாலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் இன்னொரு பக்கம் இருட்டானது. அதன் விளைவாக உருவானதே அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவான பொருளாதார மந்த நிலை. அப்போது வேலை இழந்தவர்கள் ஏராளம். இந்தியாவிலும் அந்த நிலை எதிரொலித்தது. பன்னாட்டு நிறுவனங்கள் ஒரே நாளில் வலரை வேலையை விட்டு அனுப்பின. பலர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் சிறிய கண்ணாடிக் கூடுகளுக்குள் அழகிய கிளிகளாக வளர்க்கப்பட்ட மூன்று பேரின் கதையை இடைவேளை என்ற நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் ஆர். வெங்கடேஷ். ஆர்த்தி, ரஞ்சன், கல்யாண் ஆகிய பாத்திரங்கள் உலகப் பொருளாதார நெருக்கடியால் வேலையிழக்கும் தருணத்தில் தொடங்கும் இந்நாவல் ஒரு தற்கொலையுடன் முடிவடைகிறது. கல்யாணின் குடும்பம் அவர் வேலையிழந்ததும் அவர் மீது செலுத்தும் அலட்சியமான அழுத்தம் இன்று பல குடும்பங்களுக்கு பொருந்தும். ஐடி நிறுவன வேலைகளால் குடும்பங்கள் உயர்நிலைக்கு வந்தாலும் வேலைக்குப் போகின்றவனின் சிரமங்களைப் புரிந்துகொள்ளாமல் அவனது பணத்தை மட்டுமே குறியாகக் கருதும் பேராசை அல்லது நடுத்தர வர்க்க மனோநிலையை இந்நாவல் பிரதிபலிக்கிறது. பெரு நிறுவனங்களின் சலுகைகளை அனுபவித்து, அது திடீரென்று இல்லாமல் போகிறபோது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இன்னொரு வேலையைத் தேட அவர்களின் அலைச்சல்கள், அதில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்கள் என்று இந்நாவல் ஒரு சமகாலக் கண்ணாடி. கையில் எடுத்துவுடன் விறுவிறுவென்று வாசிக்கச் செய்துவிடும் எளிமையான மொழிநடை. நவீன வாழ்க்கையின் நரித்தனங்கள், பணத்தை மட்டுமே நம்பும் மனிதர்கள் என்று வாசிக்க வாசிக்க நகர்ப்புர வாழ்வின் மீது கசப்புள்ளவர்களுக்கு பீதியை ஏற்படுத்துகிறது. மிகவும் அவசியமான கசப்பு மருந்து இந்த பீதி. நன்றி: அந்திமழை, 1/11/13.