வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்
வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம், கவிதைகள், அமிர்தம் சூர்யா, அன்னை ராஜராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, விலை 100ரூ.
நீந்தும் சொற்கள் பழைய சோறென இருக்கும் என் வாழ்வுக்கு இன்னமும் அவள்தான் நினைவில் ஊறிய இழப்பின் மாவடு… இந்த கவிதை உருவாக்கும் மனச்சித்திரங்கள்தான் இக்கவிதையின் வெற்றி. வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் என்கிற இந்த கவிதைத் தொகுப்பில் கவிதைகளாக முழுமை அடைந்துள்ள ஒவ்வொருவருக்குமான தனித்தனி அனுபவங்களான கவிதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. சூர்யாவின் கவிதைகள் மிகவும் அந்தரங்கமான விஷயங்களைப் பேசுகின்றன. அதே சமயம் அவர் பயன்படுத்தும் மாவடு போன்ற எளிய படிமங்கள் அக்கவிதையை சட்டென்று பொதுமைப்படுத்திவிடுகின்றன. வாசிப்பவனும் அவர் எழுப்பும் உணர்வுகளில் சிக்கிக் கொள்கிறான். காதலை, காமத்தை, குழந்தைமையை, சமூகக் கோபத்தை, நட்பை, ஆற்றாமையை, பொறாமையை என எல்லாவற்றையும் சொற்களாக்கி நீந்த விடுகிறார் கவிஞர். அவை கவிதைகளாகத் திரண்டு எழுந்து கவிதை வாசகனைத் திணற அடிக்கும் தொகுப்பாக இது உள்ளது. சத்தியத்தைப் பற்றி ஒரு ரகசியம். அம்மா, நிழல், இன்ன பிறகொக்குகளின் காலம் உள்ளிட்ட பல கவிதைகள் எழுப்பும் உணர்வலைகள், மனத்தின் தந்திகளில் எழுப்புகின்ற நாதம் அற்புதமானது. இருப்பின் நியாய சாட்சியாய் தன்னை வாசகர்களடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே தன் கவிதை என்கிறார் சூர்யா. அதை எல்லா கவிதைகளிலும் உணர முடிகிறது. நன்றி: அந்திமழை, 1/11/13.
—-
சாயி பக்தைகளும் பாபாவும், சங்கை, ஆர். இந்திரா ராகவன், அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 20ரூ.
பாபாவின் அற்புதங்களை சுருக்கமாக கூறும் நூல். நன்றி: தினத்தந்தி, 21/11/12.