இணைவோம்
இணைவோம், மு. காலங்கரையன், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 264, விலை 100ரூ.
நூலாசிரியர் மாற்றுத் திறனாளிகளின் துயரங்களைக்கூட இருந்து அனுபவித்துள்ளதால், அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்நூலை சுவை குன்றாமல் ஓர் நாவலாக எழுதியுள்ளார். இந்நூலில் காணும் மூதுரைகள், முன்னோரின் கவிதை வரிகள், சிந்தனைச் சிதறல்கள், நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற அறிவின் திறத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். சான்றாக, சேர்ந்து வாழுகிறது மட்டும்தான், காதலுக்கு வெற்றின்னு இல்லை. நம்மள நேசிச்சவங்க நமக்குக் கிடைக்காவிட்டாலும், அவங்க சந்தோஷமா இருக்கிறதப பார்த்து சந்தோஷப்படுகிறதும், உண்மையான காதல்தான் என்ற வைர வரிகளைக் கூறலாம். நூலின் இறுதிப் பகுதியைப் படிப்போர் கண்கள் கலங்கும். அருமையான, அற்புதமான, இந்நாவல், ஆசிரியரின் தொண்டுள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. -டாக்டர் கலியன் சம்பத்து.
—-
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கிய குறிப்புகள், சசிமதன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 65ரூ.
வாழ்க்கைக்கு தேவையான முக்கிய குறிப்புகளை ஆசிரியர் தந்திருக்கிறார். உணவுப் பழக்கத்தில் இப்போது, சாலட் என்னும் பச்சைக் காய்கறி கலவை இடம் பெற்றிருக்கிறது. முட்டைகோஸ், கேரட், லெட்டூஸ் போன்றவற்றை பச்சையாக உண்ணுவதால், மூளைப்பகுதியில் வீக்க நோய் வரும் என்பது உட்பட சில தகவல்கள் உள்ளன.
—-
ஜோதிட முந்நூறு என்னும் புலிப்பாணி ஜோதிடக் களஞ்சியம், செ. தேவசேனாதிபதி, ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 240, விலை 200ரூ.
ஜோதிடம் கற்க விரும்புவோர் சில அடிப்படை நூல்களை அவசியம் பயின்றாக வேண்டும். அப்படி ஜோதிடர்கள் மத்தியில், பரவலாகப் பயிலப்படும் நூல்களில், புலிப்பாணி முனிவரால் பாடப்பட்ட, ஜோதிடம் முந்நூறு என் நூல் மிக முக்கியமான ஒன்று. ஜோதிடம் பயில்வோரும், அந்த சாஸ்திரத்தில் ஈடுபாடு உடையவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினமலர், 18/8/2013