இந்தியா 1948
இந்தியா 1948, அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 120ரூ.
1948ஆம் ஆண்டு மும்பையில் ஒரு குடும்பத்தில் நிகழும் கதைதான் நாவல். சென்னையிலிருந்து குடும்ப வறுமையால் வேலைக்காக மும்பைக்குக் குடிபெயரும் பாலக்காடு குடும்பத்தின் நாயகன் சுந்தர், கார் கம்பெனியில் வேலை செய்கிறார். கூடுதல் பயிற்சிக்காக விடுதலைக்கு முன்பே அமெரிக்கா செல்லும் அவரை, அங்கு படிக்கும் (பால்ய விதவை) குஜராத்தி பெண் சுயவரம் செய்துகொள்கிறாள். அந்நாளில் இரண்டாவது திருமணம் குற்றமல்ல. இருப்பினும் அந்த உண்மையை குடும்பத்தில் வெளியிடத் திணறுவதும், அதனிடையே குடும்பத்தின் சுக துக்கங்களும்தான் நாவல். அசோகமித்திரனுக்கே உரித்தான எளிய நடை. அவர் ஆங்கிலம் நன்கு அறிந்தவர். ஆனாலும் கதை மந்தர்கள் அமெரிக்கா, தில்லி, மும்பை எங்கே சென்றபோதிலும் ஆங்கிலம் கலக்காமல் உரையாடுவது, அசோகமித்திரனுக்கே உரித்தானது. மனைவியர் இருவர். ஆனாலும் நெருக்கமான இடங்களைப் பேசாமல் கடந்துவிடும் வழக்கமான அவரது நாசுக்கு இந்த நாவலிலும் உண்டு. விடுதலை அடைந்து காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற நேரம். சுந்தர் பணியாற்றும் ஆங்கிலேயே நிறுவனத்தின் மீது இந்திய அரசு காட்டும் பாராமுகம், தாராவியில் நடக்கும் கலவர அச்சம் நிறைந்த வாழ்க்கை , மும்பையின் புறநகர் விரிவாக்கம் என அன்றையச் சூழலை அப்படியே பதிவு செய்திருக்கிறார். 1948இல் எழுதியதைப் போன்றே இருப்பதுதான் இதன் சிறப்பு. நன்றி: தினமணி, 4/5/2015.