இனி ஒரு வலியில்லா பயணம்
இனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீ மகாதேவன், சூர்யா கம்யூனிகேஷன், சென்னை, பக். 70, விலை 50ரூ.
ஆரோக்கியமுள்ள எவரும் முற்றிய நிலையிலுள்ள புற்று நோயாளி ஒருவருடன் ஒருநாள் துணைக்கு இருந்தாலே போதும் – அவருக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும். அந்தளவுக்கு உடலாலும், மனதாலும், அந்நோயாளி படும் வேதனை, கடின மனம் கெண்டவர்களையும்கூடக் கலங்கச் செய்துவிடும். இது தொற்றுநோய் வகையைச் சார்ந்தது அல்ல. என்றாலும், சொந்தக் குடும்பத்தினரேகூட இவர்களின் சீழ் வடியும் கட்டிகளைக் கண்டு அருவருப்பு அடைந்து அருகில் வர மாட்டார்கள். இத்தகைய புற்றுநோயாளிகளுக்கு அடைக்கலம் தந்து, சிகிச்சை அளித்து ஆதரித்து வரும் இலவசக் காப்பகம்தான் சென்னை – திருவான்மியூரில் உள்ள ஸ்ரீமாதா கேன்ஸர் கேர். இங்கு 250க்கும் மேற்பட்ட, முற்றிய நிலையிலுள்ள புற்று நோயாளிகளுக்கு இலவசமாகப் புகலிடமும், சிகிச்சையும் அளித்து, வேசை மனப்பான்மையுடன் எப்படிக் கவனிக்கப்படுகிறார்கள் என்பதையும், தான் எப்படி இந்நிறுவனத்தில் பங்கேற்று முக்கியப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது என்பதையும் ஆசிரியர் படம்பிடித்துக் காட்டுகிறார். குறிப்பாக, மருத்துவர்களால் கைவிடப்பட்டு இறுதி நிலையில் உள்ள, கடும் வேதனைக்கு ஆளான புற்று நோயாளிகளுக்கு, வலியைக் குறைத்து, அவர்கள் அமைதி பெற வழி செய்யும் உயரிய சிகிச்சையான Palliative Care எனப்படும் வலி தணிப்பு சிகிச்சை இங்கு அளிக்கப்படுகிறது. இந்தியாவில், இத்தகைய சிகிச்சை தர அரசு அங்கீகாரம் பெற்ற மிகச் சில அமைப்புகளில் ஒன்றுதான் ஸ்ரீமாதா கேன்ஸர் கேர். இதன் செயல்பாடுகள் சிறப்பான முறையில் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. -பரக்கத். நன்றி: துக்ளக், 4/11/2015.