தொல்லியல் ஆய்வுகள்
தொல்லியல் ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 120ரூ.
ஒரு நாட்டுக் கலாசார பண்பாட்டு வரலாற்றை கணிப்பதற்குத் தொல்லியல் ஆய்வுகள் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. இதுகுறித்து குறிப்பாக தமிழகத்தில் பூம்புகார், காஞ்சி முதலான தொன்மைச் சிறப்புமிக்க நகரங்களில் கல்வெட்டு, நாணயம் பற்றியவை குறித்து செய்த அகழ்வராய்ச்சிகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பூம்புகாரில் செய்த அகழ்வாய்வுகள், அந்நகரம் முழுமையும் அழிந்துவிட்டது என்ற எண்ணத்தைப்போக்கி, பல பகுதிகள் புதையுண்டுக் கிடக்கின்றன என்னும் உண்மையைக் காட்டுகின்றன. தமிழகத்தில் கிடைத்துள்ள பிராமி கல்வெட்டுகள், தொண்டை மண்டலத்தில் சமண சமயத்தைப் பற்றி பல புதிய செய்திகள், பாண்டியர்களின் சமயத்தொண்டு, அவர்களின் பழைய நகரமான உக்கிரன்கோட்டை இவற்றைப் பற்றிய புதிய கல்வெட்டுச் சான்றுகளுடன் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை படைத்திருக்கிறார் பேரா. முனைவர். கே.வி. ராமன். நன்றி: தினத்தந்தி, 28/10/2015.
—-
ஸ்டீபன் ஹாகிங், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ.
உடல் முழுக்க செத்துப்போன நிலையில், ஒரு சக்கர நாற்காலிப் பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்கின் வாழ்க்கை வரலாற்று நூல். உடல்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், மன உறுதியும், லட்சியும் இருந்தால், மருத்துவ உலகம் சொல்வதைப் பொய்யாக்கி உயிர் வாழலாம் சாதனையாளராக என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் ஸ்டீபன் ஹாகிங்கின் வாழ்க்கையை எளிய, சுவாரசியமான நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் முனைவர் நாகூர் ரூமி. வெற்றி பெறத் துடிக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 21/10/2015.