இன்று ஒரு தகவல்
இன்று ஒரு தகவல், முத்துநாடு பப்ளிகேஷன், 48/31, புதூர், அக்ரகாரம், தேவகோட்டை 630302, விலை – முதல் தொகுதி ரூ.600, இரண்டாம் தொகுதி ரூ 750.
வானொலியில் தினமும் ஒரு தகவலைச் சொல்லி, மக்களை சிந்திக்கச் செய்தவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். தகவலுடன் சேர்த்து அவர் சொன்ன குட்டிக்கதைகள் அழகானவை. அற்புதமானவை. அவர் சொன்ன நூற்றுக்கணக்கான குட்டிக்கதைகள், இரண்டு பெரும் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை படிப்பு, அறிவு, பந்தபாசம், மனித இயல்புகள் இவ்வாறு பொருள் வாரியாகத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது. எல்லா நூல் நிலையங்களிலும் இடம் பெற வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 4/4/2012.
—-
ஸ்ரீ ராமகிருஷ்ண ஆரதி, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடம், சென்னை 4, பக். 128, விலை 30ரூ.
சுவாமி விவேகானந்தர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்புதான் ராமகிருஷ்ண ஆரதி. ஒவ்வொருவரும் அவரவருடைய தாய்மொழியில் அவற்றிற்கான பொருளைத் தெரிந்து கொண்டு பாட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஆரதி பாடல்களை தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளது ராமகிருஷ்ணமடம். ஆரதிப் பாடல்களில் இடம் பெற்றுள்ள ஐந்து பாடல்களை வரிக்கு வரி விளக்கியிருப்பதால், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஆரதி பாடல்களின் பொருளைத் தமிழில் புரிந்து பாட முடிகிறது. மெய்மறக்கவும் முடிகிறது. பாடல்களின் உச்சரிப்பை மட்டுமே கேட்டு பாடிய சாதாரண மனிதர்கள், இனி அவற்றின் அர்த்தங்களைப் புரிந்து பாடுவார்கள். ஆரதி பாடல்கள் எழுதப்பட்ட வரலாறு சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களின் ராகமும், தாளமும் சுவாமி விவேகானந்தரின் இசை ஞானத்தைக் காட்டுகிறது. ராகமும் தாளமும் மட்டுமே இசையாகிவிடாது. ஒரு கருத்தை அது வெளிப்படுத்த வேண்டும். வெறுமே இழுத்தும் நீட்டியும் பாடப்படும் பாட்டை யாராலும் ரசிக்க முடியாது. பாடுபவனின் உணர்வுகளைத் தூண்டாத இசை இசையே அல்ல என சுவாமிஜி கூறியுள்ள கருத்து என்றைக்கும் பொருந்தும். நன்றி: தினமணி.