இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள்
இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள், மலையமான், அன்பு பதிப்பகம், பக். 144, விலை 70ரூ.
நாய்க்கு நன்றி சொல்லவும், பூனைக்கு கோபத்தை வெளிப்படுத்தவும், அதன் வால்கள் பயன்படுவதைப்போல, ஆடு, மாடு, அணில், நாய், பூனை, குதிரை, குரங்கு, கங்காரு உள்ளிட்டவை அதன் வால்களை என்னென்ன காரணங்களுக்காக எவ்வாறு பயன்படுத்துகின்றன? எந்தெந்த உயிரினங்கள் தனது உணவுத் தேடலையும் தண்ணீர்த் தாக்கத்தையும் எப்படி பூர்த்தி செய்து கொள்கின்றன? என நூலில் சொல்லப்பட்டிருக்கும் விதம் அற்புதம். சூரியப்பறவை தவிட்டுக்குருவி உள்பட 5 பறவை இனங்கள், கடல் குதிரை, கடல் சிலந்தி உள்பட 4 கடல்வாழ் உயிரினங்கள், மின்மினிப் பூச்சிகள், கஸ்தூரிமான், தேவாங்கு உள்ளிட்ட அரிய வகையிலான 17 உயிரினங்களிடம் உள்ள நமக்குப் பெரும்பாலும் தெரிந்திராத அதன் தோற்றம். இனப்பெருக்கம், வாழ்க்கை முறைகள், வகைகள் ஆகியனவற்றை ஆசிரியர் விரிவாக விவரித்திருக்கிறார். இவை தவிர சுமார் 100க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வியப்பூட்டும். சிறப்புகளையும் ஆங்காங்கே நூலில் பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார். முட்டை போடுவதையும், குட்டி போடுவதையும், பெண் இனங்களே செய்தாலும், அக்குட்டிகளையும் முட்டைகளையும் வித்தியாசமான முறையில் பாதுகாக்கும் ஆண் இனங்கள் பற்றியும் நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது. எறும்புகளையும் அதன் சிறப்புகளையும் பற்றி பழங்கால இலக்கியங்கள் கூறும் பாடல்களும் அதற்கான விளக்கங்களும் நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கின்றன. தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் பேரக்குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு இந்நூலில் சொல்லப்பட்டுள்ள விநோத உயிரினங்களின் குணங்களை ஒவ்வொன்றாய் சொல்லி மகிழ்ந்திடத் தேவையான புத்தகம். நன்றி: தினமணி, 7/7/13.
—-
சிலப்பதிகார ஆராய்ச்சி, பேராசிரியர் வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-3.html
சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் மிக முக்கியமானது பேராசிரியர் வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார் எழுதிய இந்நூல் ஆகும். இவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். சிலப்பதிகாரத்தை அணு அணுவாக ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றா? இந்நூலில் பெருங்காவியத்துக்குரிய இலக்கணங்கள் அமைந்து இருக்கின்றனவா? இதனை இயற்றியவர் இளங்கோவடிகளா? அவர் சேரன் செங்குட்டுவனின் தம்பியா? இந்த நூல் சங்க காலத்தைச் சேர்ந்த நூலா… இப்படி பல கேள்விகளை எழுப்பி தமது ஆராய்ச்சி மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் நூலாசிரியர். தன் வாதத்துக்கு வலுவூட்ட பழம் பெரும் நூல்களில் இருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் நூல், ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 24/3/13