இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும்

இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும், பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 368, விலை 200ரூ.

அருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றையும், அவர் அருளிய திருஅருட்பாக்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் தாங்கிய விரிவான ஆய்வுப் புத்தகம் இது. வள்ளலார் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள், அவரது சத்திய ஞான வாக்குகள், அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இராமலிங்கர் சென்னை, ஏழுகிணறு, வீராசாமிப்பிள்ளை தெருவில் பழைய கதவு எண் 39இல் வசித்தது முதல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் உள்ள அறைக்குள் அமர்ந்து திருக்காப்பிட்டுக் கொண்டு, கதவை வெளிப்பக்கம் பூட்டிவிடுமாறு அணுக்கத் தொண்டர்களிடம் கட்டளையிட்டது வரை நம் மனக்கண் முன்னே இராமலிங்கரின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். இராமலிங்கரின் திருவுருவம் கொண்ட பல அரிய புகைப்படங்கள், இராமலிங்கர் தங்கியிருந்த இடங்கள், அணுக்க சீடர்களுக்கு ஞானத்தலம் பயிற்றுவித்த மலைக் கோயில்கள், திருஅருட்பாவைக் காத்த ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளை, மாணிக்கவாசகர் அருளிய தமிழ்த் தாழினை உள்ளிட்ட தகவல்கள் புதியவை. இராமலிங்கர் அன்றைய சமயவாதிகளின் எதிர்ப்புகளைச் சகித்து ஞான தவம் புரிந்த சூழலையும், திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளிலும் விரவிக் கிடக்கும் அரிய கருத்துக்களையும் நூலாசிரியர் புதிய கோணத்தில் அணுகி அழகுற வடித்துள்ளார். நன்றி: தினமணி, 30/12/2013.  

—-

  உடல் உண(ர்)வு மொழி, தே. சவுந்தரராஜன், விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் 1, விலை 80ரூ.

எப்போது உண்ணக்கூடாது, எதை உண்ணவேண்டும், எப்படி உண்ண வேண்டும், எதனுடன் சேர்த்து உண்ணவேண்டும், உண்டபின் என்ன செய்யக்கூடாது போன்ற பல குறிப்புகள் விவரமாக விளக்கப்பட்டுள்ளன. நமக்கு என்னென்ன சிறு சிறு கோளாறுகள் நேரிடும். அதை எப்படி போக்க வேண்டும், மேலும் வராமல் எப்படி தடுக்க வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *