இலக்கியத் திறனாய்வியல் ஓர் அறிமுகம்
இலக்கியத் திறனாய்வியல் ஓர் அறிமுகம், பகுதி 2, இரா. சாவித்திரி, சக்தி பதிப்பகம், 197, புட்பம் காலனி, அருளானந்த நகர், தஞ்சாவூர் 613007, பக். 402, விலை 200ரூ.
தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக உள்ளது திறனாய்வியல். இரண்டாவது தொகுதியான இதில், தமிழ்த் திறனாய்வு வரலாறு என்ற இயலில் நிகழ்கால திறனாய்வுப் போக்குகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு பற்றியும், இதழ்கள் வளர்த்த திறனாய்வு இயலில் எழுத்து, இலக்கிய வட்டம், கணையாழி, வானம்பாடி, கொல்லிப்பாவை, உயிர்மை ஆகிய இதழ்களின் திறானாய்வுப் போக்குகளைப் பற்றியும், மேலை இலக்கியத் திறனாய்வு முன்னோடிகள் என்ற இயலில் சிக்மண்ட் பிராய்டு, எலியட், ரெனவெல்லக், எப்.ஆர்.லீவிஸ், நாத்ராப்ரை, ரோலன் பர்த்ஸ், ழாக் தெரிதா முதலானோரின் திறனாய்வுக் கொள்கைகள் குறித்தும், தனி நபர் பங்களிப்பில் திருமணம் செல்வகேசவராயர் முதல் க.மோகன்ரங்கன் வரை 63 திறனாய்வாளர்களின் பங்களிப்பு பற்றியும், திறனாய்வுப் போக்கின் வளர்ச்சி மற்றும் நிறைகுறைகளும் கூறப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகள் பற்றிய பட்டியல் பின்னிணைப்பில் இணைத்தும் தரப்பட்டுள்ளது. இவர்கள் இலட்சியவாதிகள். பணத்தையோ புகழையோ, பட்டங்களையோ, பரிசுகளையோ எதிர்நோக்கி எழுதத் துவங்கியவர்கள் அல்லர். இவர்களின் படைப்பில் யதார்த்தவாதமும், அதீதக் கற்பனை சிந்தனைவாதமும், கவித்துவமும், கற்பனை ஆழமும், உணர்ச்சிச் செறிவும், சிந்தனை மிடுக்கும், சுயானுபூதியும், தனித்த முத்திரையும் காணப்படுகின்றன என மணிக்கொடி எழுத்தாளர்கள் பற்றி தி.க. சிவசங்கரன் கூறியுள்ளார். திறனாய்வியல் பற்றிய நூல் என்றாலும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. நன்றி: தினமணி, 31/12/2012
—-
பாலியல்+வன்முறை=திரைப்படம், பாவைப் பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-142-3.html
திரைப்படங்கள், சமச்சீர் கல்வி, பாலியல் கல்வி தேவையா, ஒலிபரப்புத் தவறுகளும், தீர்வுகளும் இப்படி பல்வேறு பொருள்கள் பற்றிய கட்டுரைகள் கொண்ட புத்தகம், சிந்தனைக்கு வேலை கொடுக்கும் கட்டுரைகளை தஞ்சை இறையரசன் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/12/2012