திரும்ப வராத கடந்த காலம்
திரும்ப வராத கடந்த காலம், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, பரத் பதிப்பகம்
இந்த கதையில் வரும் கதாநாயகன் ஒரு கற்பனையாளன், ஏழையான பீட்டர்ஸ் பர்க், அறிவுத்திறம் மற்றம் உயர்ந்த ஆன்மிக தரம் உடையவன். தஸ்தயேவ்ஸ்கியின் மற்ற படைப்புகளில் வரும், பெரும்பாலான கதாநாயகர்களை போன்றே தன்னை சுற்றியுள்ள வாழ்க்கைக்கு தான் ஏற்றவனல்ல என்று நினைக்கிறான். சென்ற நூற்றாண்டின் மத்திய பகுதியை சேர்ந்த பழைய பாரம்பரிய ரஷ்யாவை குறிக்கும் வகையில் ஒரு பெரிய இரைச்சல் மிகுந்த, இருண்ட நகரை தஸ்தயேஸ்வ்கி தன் படைப்பில் வியத்தகு முறையில் சித்தரிக்கிறார். முதன் முதலாக இக்கதை 1848ம் ஆண்டு வெளியானது. தற்போது மீண்டம் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலானது, ரஷ்ய இலக்கியத்தின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்று என இலக்கிய விமர்சகர்களால் பாராட்டப் பெற்றது. இதை விட நம் கவனத்தை கவர, வேறென்ன பெரிய விஷயம் வேண்டும்? மொத்தம் 112 பக்கங்களுடன் நூல் வெளிவந்திருக்கிறது. இந்த நூலை தேவநேய பாவாணர் நூலகத்தில் படித்து பயன்பெறலாம். நன்றி: தினமலர்,10/3/2013
—-
க.ப. அறவாணரின் பன்முகச் சிந்தனைகள், கந்தகப் பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணைஞ்சான் தெரு, சிவகாசி 626123, விலை 150ரூ.
சிறந்த தமிழறிஞரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான க.ப. அறவாணன் எழுதிய புத்தகங்களில் பெரும்பாலானவை தமிழின் சிறப்பையும், தமிழரின் பெருமையைம் பறைசாற்றுபவை. எனினும், தமிழின் பழம் பெருமையை இழந்து பின் தங்கிவிட்டானே என்ற ஆதங்கம் அவர் எழுத்துக்களில் பளிச்சிடும். அவருடைய நூல்களை ஆராய்வு செய்து, முனைவர் பொ.நா. கமலா, இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதைப் படிக்கும்போது அறவாணனின் சிந்தனைச் சிறப்பையும், அவர் நூல்களில் காணப்படும் அரிய கருத்துக்களின் சாரத்தையும் அறிய முடிகிறது. சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 2/7/2013