ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்
ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ், இலங்கை, ஞானம் பதிப்பகம்,3பி, 46வது ஒழுங்கை, கொழும்பு -06, விலை 1500ரூ.
தமிழில் யுத்த இலக்கியத்திற்கு நீண்ட கால மரபு இருக்கிறது. புறநானூறு என்ற மாபெரும் இலக்கியத் தொகுப்பின் மூலம், யுத்தத்தை தமிழ்ச் சமூகம் எப்படி அணுகியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நவீன உலகின் தமிழர்கள் கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தங்கள் விடுதலைக்கான யுத்தம் ஒன்றை நடத்தினார்கள். குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட அந்த யுத்தத்தின் மாபெரும் தொகை நூல் ஒன்றினை இலங்கியிலிருந்து வெளிவரும் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை 600 பக்கங்களில் பெரும் சிறப்பிதழாகக் கொண்டு வந்துள்ளது. யுத்தத்தின் இருண்ட காலப் பதிவுகளையும், தீராத குருதியின் சுவடுகளையும் ஈழத்திலிருந்து கதைகளாகவும், கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் ஏராளமான படைப்பாளிகள் பதிவு செய்தார்கள். அவற்றின் தேர்ந்தெடுத்த பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு, தமிழின் ஒரு புதிய இலக்கிய வகைமையை முன்னிறுத்துகிறது. கனத்த இதயத்துடன் கடந்து செல்லவே முடியாத பக்கங்கள் இவை. தமிழர்களின் துயர வரலாற்றின் பெரும் ஆவணமாக இந்தத் தொகுப்பு என்றும் இருக்கும். நன்றி: குங்குமம், 31/12/2012.
—-
தகவல் பெறும் உரிமைச்சட்டம், இராமநாதன் பதிப்பகம், 25, மூன்றாவது தெரு, ஆபீசர்ஸ் காலனி விரிவுவாக்கம், சென்னை 50, விலை 70ரூ.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும், இந்தியாவில் உள்ள சட்டப் பிரிவுகள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. இதன்படி, யார் வேண்டுமானாலும், எந்தத் தகவலையும் அரசாங்கத்திடம் கேட்டுப்பெறலாம். இந்தச் சட்டம் பற்றிய விவரங்களைத் தெளிவாக விளக்குகிறார் வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாச்சலம். நன்றி: தினத்தந்தி, 26/12/2012