இலக்கிய உலா
இலக்கிய உலா, முகில் தமிழ்ச் செல்வன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 208,விலை 135ரூ.
அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்வு. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றின்றி மற்றொன்று இல்லை. இரண்டும் ஒன்றியதே சங்கச் சால்பு. பண்டைத் தமிழர் மறமாண்பும் மறத்திலும் அறம் கருதும் மாட்சியும், வீரத்தோடு ஈரமும் மிகுந்த மாண்பும், பீடும் பெருமிதமும் அளிப்பன. இந்த அரிய சேர்ப்பு – வீரமும், ஈரமும், மறமும் அறமும் அருங்கலவை ஆகும். இந்த வீரம் செறிந்த பனுவல்களைப் பயிலும்போது, வீரம் விளைகிறது. மறம் மேலிடுகிறது.விம்மிதம் ஏற்படுகிறது. வெஞ்சினத்தின் உச்சியிலே, வஞ்சினம் விளைகிறது. வீரம் கொப்பளிக்கிறது. வித்தகம் பேசுவதைவிட அந்த வஞ்சினப் பாக்களையே, அவற்றையே பாருங்கள். அந்த வீர மன்னர்களையே காணுங்கள். அந்த மறவர்களையே நேருக்கு நேர் சந்தியுங்கள். அந்தச் சந்திப்பின் சிந்திப்பில் நீங்களும் அவர்களாக ஆகுங்கள். அப்போதுதான் அவர்களின் உணர்வுகள் உங்களிடம் ஓங்கும். உங்கள் நரம்புகள் முறுக்கேறட்டும். நாளங்களில் குருதி கொட்டட்டும்’ என ‘வெஞ்சினமும் வஞ்சினமும்’ என்ற கட்டுரையில் படிபோர் நரம்பை முறுக்கேற்றி பண்டைத் தமிழரின் வீரயுகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். பத்து கட்டுரைகளில் ஒன்றுகூட சோடை போகவில்லை. ஆராதனை மலர்கள், கம்பனும் கும்பனும், அன்பெனும் பிடியில் அகப்படும் திருவடி, குமரகுருபரர் ஒரு கண்ணோட்டம், சிந்துநதியின் மிசை, அறிவை விரிவுசெய். கண்டேன் கண்டிலனே, தத்துவ வித்தகர், பட்டுக்கோட்டை ஒரு பாட்டுக்கோட்டை வரை இலக்கிய நயத்துடன் எழுதியுள்ளது நூலாசிரியரின் இலக்கிய ஆர்வத்தையும் ரசனையையும் பளிச்சிடச் செய்கின்றன. படித்து பபலமுறை உலா வரலாம்…. நன்றி: தினமணி 31-10-2011.