குருதியில் நனையும் காலம்
குருதியில் நனையும் காலம், ஆளுரு ஷாநவாஸ், உயிர்மை பதிப்பகம்,a 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18. விலை 100ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0000-202-1.html
இஸ்லாமிய அரசியல் எழுச்சி மற்றும் சிந்தனைகளை, பாபர் மசூதி இடிப்புக்கு முன், பின் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் சலுகைகளைப் பெறுவதாக, அதற்குப் போராடுவதாக முன்பு இருந்தது. ஆனால் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு தங்கள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கே பெரும்பாலான நேரத்தைச் செலவு செய்ய வேண்டிய நெருக்கடியை அவர்களுக்கு உருவாக்கிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாமிய சமூகத்துக்குள் இருந்து அரசியல், சமூகவியல் ரீதியாக எத்தனையோ நல்ல இளைஞர்கள் தங்களது எண்ணங்களைப் பதிவுசெய்ய முளைத்தனர். அதில், ஆளூர் ஷாநவாஸ் குறிப்பிடத்தக்கவர். அவரது கட்டுரைத் தொகுப்பு இது. “மூஸ்லிம்கள் குறித்து பொது அரங்கில் வரையப்பட்டிருக்கும் சித்திரம் அபாயகரமானதாகவும் வேதனையளிப்பதாகவும் உள்ளது. அரசியல் உரிமை அற்றவர்களாகவும் அதிகாரம் இழந்தவர்களாகவும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் வாழும் விளிம்பு நிலைச் சமூகமான முஸ்லிம்களை, பாதிக்கப்பட்டவர்களாகப் பார்க்காமல் அடிப்படைவாதிகளாகவும் மதவாதிகளாகவும் பார்க்கும் போக்கு மேலோங்கி உள்ளது. எல்லா மனிதர்களக்கும் எளிதில் கிடைக்கும் எல்லாமும் முஸ்லிம்களுக்கு அவர்கள் ‘முஸ்லிம்’ என்ற ஒரே காரணத்துக்காகவே மறுக்கப்படுகிறது” என்று ஆதங்கப்படும் இவர், முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் சில குறைப்பாட்டையும் விமர்சிக்கிறார். முஸ்லிம்கள் எப்போதும் தம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வது இல்லை என்பதும் இரவது குற்றச்சாட்டு. “நபிகளார் வலியுறுத்திய பண்புகள் எவற்றையும் நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்காதவர்கள் எல்லாம் தொலைக்காட்சியில் தோன்றி ‘ரசூலுல்லாஹ் அப்படிச் சொன்னார்கள், இப்படிச் சொன்னார்கள்’ என்று சமுதாயத்துக்கு வகுப்பு எடுக்கின்றனர். யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்றெல்லாம் பகுத்துப் பார்க்கத் தெரியாமல் எல்லோருக்கும் வாரி இறைத்துக்கொண்டிருக்கிறது இந்தச் சமூகம்” என்று யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டுகிறார். திருமாவளவனின் முஸ்லிம் பாசம், சீமானின் நாம் தமிழர் கோஷம், அ.மார்க்ஸின் நிலைப்பாடுகள், அப்துல்நாசர் மதானியின் செயல்பாடுகள், நரேந்திரமோடியின் பிம்பம்… என, சமகாலத்துச் சர்ச்சைகள் அனைத்தையும் தன்னுடைய சுயசிந்தனையால் ஆளூர்ஷாநவாஸ் பரிசீலனை செய்கிறார். இதில் காயிதேமில்லத் பற்றிய கட்டுரை மிகமுக்கியமானது. “காயிதே மில்லத் தமது வாழ்நாளில் ஒருபோதும் இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம் அரசியலையும் போட்டுக் குழப்பிக்கொண்டதில்லை. அவர்,இஸ்லாமியக் கொள்கைகளைப் பிசகாமல் பின்பற்றிய நல்ல முஸ்லிமாகவும் வாழ்ந்தார். அதேசமயம் பன்முகத் தன்மைகொண்ட இந்தியச் சூழலில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட நல்ல அரசியல் தலைவராகவும் இருந்தார். அவருக்குப் பிறகு முஸ்லிம்களுக்கான தலைமைப் பொறுப்பை பெற்றவர்கள் மார்க்கத்தையும் அரசியலையும் போட்டுக் குழப்பிக்கொண்டதே முஸ்லிம்களின் அரசியல் பின்னடைவுக்கான காரணம்” என்று ஷாநவாஸ் சொல்லியிருப்பது இன்று அந்தச் சமூகம் செல்ல வேண்டியதற்கான சரியான பாதை. ‘மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து, பின்னே இனிக்கும்’ என்பார்கள். இந்த இளைஞன் வாசகமும் அப்படிப்பட்டதுதான். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 21-4-2013.