மலையமான்கள்

நாட்டாரியம் (வேங்கடசாமி நாட்டாரின் நற்றமிழ் ஆய்வுத் தளங்கள்) – தொகுப்பு: காவ்யா சண்முகசுந்தரம், வெளியீடு – காவ்யா பதிப்பகம், சென்னை 24, பக். 916, விலை 700ரூ.

தமிழின் செழுமையான வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றியவரான தமிழறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் எழுத்தாளுமைகளை மொத்தமாகப் பதிவு செய்துள்ளது. நாட்டாரியம் என்பது ஆழ்ந்த புலமை, அகன்ற பாண்டித்யம், அரிய உரைவளம், நுண்ணிய ஆய்வு என்று பல பொருள் கொள்ளலாம். இவர் எழுதிக் குவித்த எண்ணற்ற இலக்கண, இலக்கிய, வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றை ஒருங்கே தொகுத்திருக்கிறார் தொகுப்பாசிரியர். முதல் பகுதியில், தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று வேங்கடசாமியின் வாழ்க்கை வரலாற்றை வே. நடராஜனும், இரண்டாம் பகுதியில் நாட்டாரின் ஆய்வுத்தடம் என்ற தலைப்பில் திறனாய்வுத் திறன் பற்றி கஸ்தூரி நாகராஜனும் தமிழ்ப் பண்பாடு பற்றி அரு. மருதத்துரையும் வேங்கடசாமி நாட்டாரின் தமிழ்த்தொண்டு குறித்து பதிவு செய்துள்ளனர். வேங்கடசாமி நாட்டாரின் ஒவ்வொரு கட்டுரையையும் தேடிப்பிடித்துப் படிக்கும் சிரமத்தைக் குறைந்துள்ளது இந்த அரிய தொகுப்பு.  

—-

 

மலையமான்கள், பாகூர் புலவர் சு.குப்புசாமி, அருள் பதிப்பகம், சென்னை 78, பக்.132, விலை 100ரூ.

பொதுவாகக் கல்வெட்டு ஆய்வு நூல்கள் என்பது சம்பந்தப்பட்ட வரலாற்றுத் துறையைச் சேர்ந்தவர்களால் மட்டுமே படித்து ரசிக்கத்தக்கதாக இருக்கும். ஆனால் அனைத்துத் தரப்பினரும் ஒர் ஆய்வு நூலைப் படித்து ரசிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இந் நூலாசிரியர். தமிழக வரலாற்றில் குறுநில மன்னர்களாக இருந்த பல இனத்தவர் இப்போது எங்கிருக்கிறார்கள்? என்ன ஆனார்கள்? என்று தெரியாத நிலையில் மலையமான்கள் குறித்து சங்க காலம் தொடங்கி தற்காலம் வரையில் விரிவாக ஆராய்ந்து அதைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கியிருக்கிறார். மலையமான்களது வரலாற்றை வெறும் ஆதாரங்களோடு மட்டுமல்லாமல், தமிழ் இலக்கியங்களில் அவர்கள் குறித்த குறிப்புகளை மேற்கோள் காட்டி, அதை உறுதிப்படுத்த கல்வெட்டுகளைச் சுட்டிக்காட்டியிருப்பது மற்ற வரலாற்று நூல்களில் இருந்து இந்நூல் சற்று வேறுபடுகிறது. கடையெழு வள்ளல்கள் குறித்த பல அரிய தகவல்களும் உள்ளன. மலையமான்களது வரலாறு ஆட்சிபுரிந்தோர் விவரம், அவர்கள் சார்ந்த மன்னர்கள், கட்டிய கோயில்கள், அதன் சிறப்பு என எழுத்தால் மட்டுமின்றி, அதற்குரிய படங்களையும் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினமணி, 10/10/2011.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *