இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை, ராஜரட்ணம் ருக்க்ஷான், சுபாஜினி சண்முகராஜா, தட்சாயினி குலேந்திரன், குமரன் புத்தக இல்லம், 3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, வடபழனி, சென்னை 26, விலை 220ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-5.html

கடந்த 60 ஆண்டுகளாகத் தன்னுடைய இனவாத முகத்தை மறைக்க இலங்கைக்குத் தேவையான முகமூடியாக அதனுடைய வெளிநாட்டுக் கொள்கையே இருந்து வந்துள்ளது. சுதந்திர இலங்கையில் முதல் எட்டு ஆண்டுகள் பிரிட்டன் ஆதரவுடன் ஆட்சி நடந்தது. அதன் பிறகு, கம்யூனிஸ்ட் நாடுகளை ஆதரிக்கும் கட்சியின் கைக்கு ஆட்சி போனது. அப்போது, இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டை எடுத்தனர். கம்யூனிஸ நாடுகளுடனான நட்பு பின்னர் புதுப்பிக்கப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அமெரிக்காவுடன் இஸ்ரேலையும் ஆதரிப்பவராக பிரேமதாஸ் இருந்தார். அடுத்து வந்த சந்திரிகா அனைத்து நாடுகளின் ஆதரவையும் வாங்குபவராக இருந்தார். அந்தக் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்து கொடுக்க லஷ்மண் கதிர்காமர் இருந்தார். ரணில் ஆட்சியும் அமெரிக்க ஐரோப்பிய ஜப்பான் ஆதரவு ஆட்சியாக அமைந்தது. இன்றைய ராஜபக்க்ஷே சீன ஆதரவு ஆட்சியை நடத்தி வருகிறார். இப்படி ஏதாவது ஒரு நாட்டின் தயவில் இலங்கை இதுவரை காலத்தை ஓட்டி வந்திருக்கிறது. மிகச்சிறிய நாடான இலங்கை மீது பெரிய நாடுகள் கவனமாக இருக்க என்ன காரணம்? இந்துமகா சமுத்திரத்தில் இலங்கையின் அமைவிடம் அதற்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்குகிறது. கடல் மார்க்கத்தில் வர்த்தகப் பாதையில் அது அமைந்துள்ளதால் முக்கியத்துவத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம் இலங்கையினுடனான வெளிநாட்டு உறவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆசியாவில் ராணுவ ரீதியான முக்கியத்துவத்தை இலங்கையின் இடவமைவு தீர்மானிக்கிறது. இதுவே இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் மிகுந்த செல்வாக்கு செலுத்துகிறது என்று இந்நூல் மிகச் சரியாகச் சொல்கிறது. தமிழர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இலங்கை ராணுவத்துக்கு சீனா ஆதரவு தருவதும், தமிழர்களைப் பார்த்து கண்ணீர் விடுவதுபோல நடித்து இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதும் இந்த வர்த்தக நலனுக்காகத்தான். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டு கட்சிகள்தான் இலங்கையை மாற்றி மாற்றி ஆண்டு வந்துள்ளன. எனவே, இக்கட்சிகளின் நிலைப்பாடுதான் ஆட்சியின் சிந்தனைகளாக அமையும். ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வருபவர்களின் மனவோட்டத்தில் இவை தீர்மானிக்கப்படும். இந்தியாவைப் பற்றி இந்த இரண்டு கட்சித் தலைவர்களிலும் காலம்தோறும் எப்படி முரண்பட்டுச் சிந்தித்தனர் என்பதை இந்தப் புத்தகம் ஆதாரங்களுடன் சொல்கிறது. சுதந்திர இலங்கையின் ஆரம்ப காலங்களில் இந்தியா இலங்கையைக் கைப்பற்றிவிடும் என்ற அச்சஉணர்வு இலங்கைத் தலைவர்களிடம் இருந்ததால், இந்தியாவை அவர்கள் எதிரியாகவே நோக்கினர். இலங்கை இந்திய உறவை மிக மோசமாகப் பாதித்த விடயம், இலங்கை இனப் பிரச்னையாகும் என்று இவர்கள் எழுதுகிறார்கள். ஈழத் தமிழர்களது அரசியல் உரிமைகளுக்கு அக்கறை கொண்டதாக இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு இருக்கும்போது இந்தியாவை இலங்கை எதிர்ப்பதும், ஈழத் தமிழர் குறித்து இந்திய அரசாங்கம் மௌனமாக இருக்கும்போது இந்தியாவை நட்பு நாடாக இலங்கை கருதுவதும் அவர்களது வெளியுறவுக் கொள்கையாக இருந்ததை உணர முடிகிறது. இன்று உலகத்தின் மனசாட்சிக்கு முன்னால் பதில் சொல்ல இலங்கை காத்திருக்கும் நேரத்தில் அதனுடைய வெளியுறவுக் கொள்கைகளைப் புரிந்துகொள்வது அவசியமானதே. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 10 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *