இலங்கை இந்திய மானிடவியல்
இலங்கை இந்திய மானிடவியல், சமயம் சமூகம் பற்றிய ஆய்வுகள், பேரா. கலாநிதி என். சண்முகலிங்கன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 222, விலை 175ரூ.
சமூக பழக்க வழக்கம், சமய வழிபாடு போன்றவற்றை உன்னிப்பாக கவனித்து, ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். இதில் 14 கட்டுரைகள் உள்ளன. சமயம் தொடர்பாக, எட்டுக் கட்டுரைகளும், சமூகம் தொடர்பாக ஆறு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இலங்கயில் தமிழர்களின் வழிபாட்டு இடங்கள், வழிபாடுகள் பற்றி சண்முகலிங்கனின் கட்டுரைகள் ஆழமாகவும் அழுத்தமாகவும் உள்ளன. கட்டுரைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாதது போல் தோன்றினாலும் தீவிர வாசகனால் அவற்றை தொடர்புபடுத்திக்கொள்ளும்வகையில், தகவல் தளம் உள்ளது. மொழி, வழிபாடு ரீதியாக பிரிந்து நிற்கும் சமூகத்தின் உணர்வெழுச்சியை அமைதிப்படுத்தி, அறிவு தளத்தில் இயங்க வைக்கும் முயற்சியாக இந்த புத்தகத்தை கொள்ளலாம். தமிழகமும், இலங்கையும் மானுடவியல் ஆய்வில் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. இது நல்லிணக்கத்தையும், எளிமையான வாழ்வை உறுதி செய்யும், சிந்தனையின் ஆரம்பமாகவும் அமையும் என்ற நம்பிக்கையை, இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது. -அமுதன். நன்றி: தினமலர், 14/12/2014.
—-
தொழிற்சாலையில் மின் நிர்வாகம் அடிப்படைகள், மு. முத்துவேலன், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம், கோவை, பக். 218. தென்னிந்திய ஆராய்ச்சி கழகத்தின் முயற்சியால், இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. மொத்தம் ஒன்பது அலகுகள், இதில் இடம் பெற்றிருக்கின்றன. மின் மூலங்கள் முதல் கேள்வி பதில் பகுதி வரை, திட்டமிட்ட மின் வழிமுறையை இந்நூல் ஆசிரியர் கையாண்டுள்ளார். இன்றைய வாழ்க்கையில், தொழிற்சாலைகளின் பங்கு அத்தியாவசியமானது. தொழிற்சாலைகளுக்கு, பெரும் பாரமாகவும், சவாலாகவும் இருப்பது மின்சாரம். சரியான கட்டணத்தில், தட்டுப்பாடின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும். கிடைக்கும் மின்சாரத்தை வீணாக்காமல் சிக்கனமாக எப்படி உபயோகப்படுத்துவது என, மின் நிர்வாகம் பற்றி, 21தொழிற்சாலை தொடர்புடையவர்களுக்கு தேவையான படவிளக்கங்களுடன், விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. மின்தரம் பற்றி பெரும்பான்மையினர் கவலைப்படுவதில்லை. மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில்தான், பல நுகர்வோர் உள்ளனர். உண்மையில் தரமற்ற மின்சாரம் உண்டாக்கும் பழுதுகளினால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை விட, மின்சாரம் இல்லாமல் அடையும் நஷ்டம் குறைவு போன்ற கருத்துகளுடனும், இப்புத்தகம் மிளிர்கிறது. தமிழில் தொழிற்சாலைகள் தொடர்பான புத்தகங்கள் மிக குறைவு. அந்த வகையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் வரவேற்கத்தக்கதே. -சி. கலாதம்பி. நன்றி: தினமலர், 14/12/2014.