இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள், எஸ். முத்துமீரான், தானல் பதிப்பகம், 39/13, ஷேக்தாவூத்தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 127, விலை 60ரூ.

வாய்மொழியாய் உலவும் கதைகள், உலகில் எல்லா மொழிகளிலும் காணப்படுகின்றன. எழுத்து மொழிக்கு முந்தையது வாய் மொழியாகும். நாட்டாரியல் என்பது அண்மைக்காலமாய் ஒரு தனித்துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது வாய்மொழியாய்ப் புழக்கும் நாட்டுப்புறக் கதைகள்தாம். இந்தக் கதைகள் யாவும், ஏதோவொரு வாழ்வியல் பயனை மையமாக வைத்தே சொல்லப்பட்டவை. நூலாசிரியர் இலங்கை நாட்டுப்புற முஸ்லிம் மக்களிடையே வழங்கி வரும், நாட்டார் கதைகளை அரும்பாடுபட்டு சேகரித்து 35 கதைகளாத் தொகுத்து தந்திருக்கிறார். மிகவும் சுவாரஸ்யமான கதைகள், வட்டார வழக்குச் சொற்களை, நூலாசிரியர் மண்வளச் சொற்கள் என்ற தொடரால் குறிப்பிட்டு, அவற்றிற்கு உரிய பொருளையும் ஒவ்வொரு கதையின் முடிவிலும் தந்திருக்கிறார். எனினும், அவை போதாது என்றே தோன்றுகிறது. அடுத்த பதிப்பில், இந்தக் குறை நீக்கபெறும் என்று நம்பலாம். படிக்கச் சுவையான நூல். – சிவா. நன்றி: தினமலர், 03 பிப்ரவரி 2013.  

—-

ஆகட்டும் பார்க்கலாம் காமராஜர் வாழ்க்கை நிகழ்வுகள், வீரபாண்டியன், தூரிகை பதிப்பகம், சென்னை 20, பக்கங்கள் 328, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-7.html

காமராஜருடன் நெருங்கிப் பழகியவர்கள் அவர்களின் நினைவில் நிற்கும் நிகழ்வுகளை இந்நூலில் உள்ள கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜி.கே. மூப்பனார், ஆர். நல்லகண்ணு, நெ.து.சுந்தரவடிவேலு, பழ. நெடுமாறன், நெல்லை ஜெபமணி, சாவி, சு. சமுத்திரம், குத்தூசி குருசாமி போன்றோர் எழுதிய இக்கட்டுரைகள், காமராஜர் என்ற தலைவருக்குள் ஒளிந்திருந்த மனிதாபிமானம், அன்பு, ஏழை, எளிய மக்களின் மீதான அவருடைய பரிவு, நேர்மை, எளிமை, கண்டிப்பு போன்ற பல குணங்களை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக, காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, அரசு தரும் வீட்டில் குடியேற மறுத்துவிட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம்… அட… அரசாங்க வீடெல்லாம் வேண்டாம்னேன். பெரிய மனுஷங்க வர்றதா இருந்தா கோட்டையில வந்து பாத்துக்கட்டும். நம்ம எப்பவும் பாக்கப்போறவன் சாதாரண மனு சந்தான். அவன் மாநிலத்துல பல மூலை, முடுக்குலேருந்து கௌம்பி வருவான். எக்மோரில் வந்து எறங்கி, காமராஜ் வீடு எங்கே இருக்குன்னுகேட்டா, டக்குன்னு எல்லாரும் சொல்ற மாதிரி இருக்கணும். அடையாறுல, கீரின்வேஸ் ரோட்லயெல்லாம் போய் ஒக்காந்துகிட்டோம்னா ஏழை, பாழைங்க நம்மள பாக்க முடியுமா? ஆட்டோவுக்கு டாக்ஸிக்குக் கொடுக்கவெல்லாம் அதுங்க எங்க போகும்? இப்படிப்பட்ட பல சுவையான நெகிழ வைக்கும் சம்பவங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமணி, 28 ஜனவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *