ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை
ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர் ஏ. இளஞ்செழியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-02, விலை 95ரூ
இங்கே தி.மு.க. இருப்பதைப்போல இலங்கையிலும் தி.மு.க. இருந்தது என்பதே பலருக்கும் தெரியாது. பெரியாரின் தலைமையை ஏற்று திராவிடர் கழகம் இங்கே இருந்தபோது இலங்கையிலும் அது உதயமானது. பெரியாரிடம் இருந்து முரண்பட்டு அண்ணாவும் அவரின் தம்பிமார்களும் விலகி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டபோது, இலங்கையிலும் அது தொடர்ந்தது. இங்கே, அரசியல் கட்சியாக தி.மு.க. மாறியபோது, அங்கே ஒரு மாற்றுச் சிந்தனை ஒலித்தது. ‘திராவிட’ என்று இடத்தை மையப்படுத்தி ஓர் இயக்கம் இருப்பதைவிட, ‘திராவிடர்’ என்று இனத்தை அடையாளப்படுத்தி இயக்கம் தொடர்வதே சரியானது என்று அவர்கள் சிந்தித்தனர். ‘இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்று பெயர் மாற்றப்பட்டது மட்டுமல்லாமல்… தமிழகத்தில் இயங்கிய தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தனர். இவர்களைச் சமாதானப்படுத்த நாவலர் நெடுஞ்செழியன் அங்கே சென்றார். ஓரளவு ஒப்புக்கொண்டு முன்வந்தனர். ஆனால், அது தொடரவில்லை. ‘எங்களுக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று பேரறிஞர் அண்ணாவே பகிரங்கமாக அறிவித்தாக வேண்டிய அளவுக்கு வேகமாக இலங்கையில் அந்த அமைப்பு வளர்ந்தது. இதன் வேராக இருந்தவர் நாவலர் ஏ. இளஞ்செழியன். அவர் எழுதிய புத்தகம்தான் இது. இங்கேயுள்ள ராமநாதபுரம் அருகில் செல்வராசன்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்த தலித் இளைஞரான இவர்தான், ‘தமிழகம்’ என்ற சொல்லைப் போலவே ‘மலையகம்’ என்று எழுதத் தொடங்கியவர். ‘ஈழம்’ என்ற சொல்லையும் அரசியல் ரீதியாக அதிகம் பயன்படுத்தியவர். இலங்கை திராவிடர் கழகம் முன்னெடுத்த கூட்டத்தில் பங்கேற்க 1948-ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து சென்ற ஜி.என்.ராசு என்பவர்தான், இலங்கைத் தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும் முதன்முதலாக தமிழ்த் தேசிய உணர்வைத் தூண்டிய முதல் மனிதர் என்ற குறிப்பும் இதில் இருக்கிறது. ஈழத்தில் உரிமை அரசியலை விதைக்க தமிழ் நாட்டில் இருந்து சென்ற இரண்டு பேர் காரணமாக இருந்த வரலாறு, இதுவரை மறைக்கப்பட்டது ஆகும். மலையகத் தமிழர்களை மையப்படுத்தி இ.தி.மு.க.வை வளர்க்க முயற்சித்த இளஞ்செழியன், சிங்கள முற்போக்காளர்கள், வடகிழக்கு மாகாணத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூவரையும் ஒரே நேர்கோட்டில் இணைப்பதற்காக எடுத்த முயற்சிகள் ஏராளம். மலையகம், வடகிழக்கு மாகாணம் மற்றும் தமிழகம் மூன்றையும் இணைத்து ‘தமிழ்ப்பேரரசு’ அமைக்க இ.தி.மு.க. முயற்சிப்பதாக குற்றம் சாட்டி ஸ்ரீமாவோ பண்டாரநாயகா பேசியதும், இதற்கு வலு சேர்ப்பது மாதிரியான பிரசாரத்துக்காகவே எம்.ஜி.ஆர் நடித்த அரசகட்டளை மற்றும் அடிமைப்பெண் ஆகிய படங்கள் ஈழத்தில் அதிகம் திரையிடப்பட்டதாகவும் பரவிய வதந்திகளைப் படிக்கும்போது சிங்கள வன்மம் எப்படிப்பட்ட பொய்களில் பூத்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. செல்வாவின் அமைதிப் போராட்டம், புலிகளின் ஆயுதப் போராட்டம்… இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பாதையை வடிவமைப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களில் முடிவெடுக்க முடியாமல், இறுதியில் இடதுசாரி, எண்ணங்களோடு முடிக்கிறார் இளஞ்செழியன். ஆனால் 1942-1970 வரையிலான காலகட்டத்தில் அவர் எடுத்த முன்னெடுப்புகள் சிங்கள அரசியல்வாதிகள் இன்று நினைத்தாலும் சினமூட்டுபவைகளாகவே இருக்கும். – புத்தகன்.
—
லவ்வாலஜி, எஸ்.கே.முருகன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை-02, விலை 85 ரூ.
இனக்கவர்ச்சி, நட்பு, ஹார்மோன்களின் விளையாட்டு, முடிவெடுக்க முடியாத வயசு என காதலைப் பற்றி, புரியும்படியான நடையில், ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்ற சுவாரஸ்யத்துடன் விஷயங்களைச் சொல்கிறது இந்த நூல். முக்கியமாக, நட்புக்கும் காதலுக்கும் உள்ள மிக மெல்லிய நூலிழை வேறுபாட்டை அபூர்வமாக, அழகாக விளக்குகிறது. – தமிழச்சி தங்கபாண்டியன். நன்றி: ஜூனியர் விகடன் 09-09-12