உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம்,

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம், டாக்டர் எஸ். கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 272, விலை 150ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-358-8.html அத்தியாவசியத்தின் வேராக இருப்பது பணம். அதன் குணம் என்ன? நியாயமான முறையில், எந்தெந்த வகையில், அதை ஈட்டலாம் என, விவரிக்கிறது இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியர், பங்கு சந்தை வியாபாரத்தில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த நூலில் மொத்தம் 46 கட்டுரைகள் உள்ளன. அனைத்தும், ஒன்றிலிருந்து ஒன்று என்ற சங்கிலி தொடராக செல்வது சிறப்பு. பணம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. பணம் அத்தியாவசியம் என்ற நியதியைக் கொண்ட உலகில், திண்டாடாமலும், தடுமாறாமலும் இருப்பதற்கு, வழிகளை கண்டு தேறுவது அவசியம் என்கிறார், இப்புத்தக ஆசிரியர். தேவையற்ற பொருட்கள் வாங்குவதை தவிருங்கள். சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை சேமிக்க முயற்சி செய்யுங்கள் என, நம்மோடு, தோழமையாக, நண்பர் பேசுவது போன்ற உணர்வை, இப்புத்தகம் தருகிறது. பணவளக் கலையில் ரிஸ்க் எடுக்க தயங்காதீர். பணத்தை பார்ட்னராக நினையுங்கள். வேலை மட்டுமே ஒருவரை பணக்காரன் ஆக்காது. வாய்ப்புகள் கிடைக்கும்போது, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நெட்வொர்க்கின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல அறிவுரைகளை நம்பிக்கை வார்த்தைகளோடு இப்புத்தகம் தருகிறது. -சி. சுரேஷ். நன்றி: தினமலர், 7/12/2014.  

—-

மஹாபாரத ராஜதர்மம் (சாந்தி பர்வம்), குமாரவாடி சே. ராமானுஜாசாரியர், திருமால் பதிப்பகம், பக். 192, விலை 100ரூ.

மஹாபாரதம் யுத்தம் முடிந்ததும், தருமர் என்று கூறப்படுபவரான யுதிஷ்டிரன், பாரப்போரில் இறந்தோர் பலர் தம் பங்காளிகள் என்றும், இது வெற்றியல்ல. தோல்வியே என்று கூறி மனம் வருந்துகிறார். நாரத முனிவர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரவுபதி, பீமன், வியாசமுனிவர் ஆகியோரின் நல் உபதேசம் கேட்ட பின்னர், தருமர் மன அமைதி பெற்ற பட்டாபிஷேகம் செய்து கொள்கிறார். தருமரின் அரச ஆணைகளும் (பக். 99), அவரின் நற்பணிகளும் (பக். 101), பீஷ்மர் கூறும் 18 வகைத் துன்பங்களின் விவரமும் (பக். 141), அவர் கூறும் அரசின், 36 குணங்களும் (பக். 187) படிக்கச் சுவையாக இருக்கின்றன. அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்று புறநானூறு கூறும் கருத்தினை நூலாசிரியர், நூலின் பல இடங்களில் சுட்டிக்காட்டுவது அவரின் ஆழ்ந்த ஆறிவாற்றலுக்குச் சான்றாகும். எது தர்மம் என்று அறிய இந்நூலை படிக்கலாம். – டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 7/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *