உணவு சரித்திரம்
உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 225ரூ.
தமிழில் சரித்திர நூல்கள் பல எழுதியிருக்கும் முகில், உலக வரலாற்றில் நடந்த சில சம்பவங்களை, உணவோடு சேர்த்து எளிய நடையில் படைத்துள்ள நூல்தான் உணவு சரித்திரம். ஆதிமனிதன் முலம் அவசரயுக மனிதன் வரை ருசிக்கும் சில உணவுகளையும், அவை பெற்றுள்ள மாற்றங்களையும் எழுத்தில் சுவையூட்டித் தந்துள்ளார் நூலாசிரியர். உப்பு, மிளகு, பெருங்காயம், எள், மரவள்ளி ஆகியவற்றின் பின்னால் இப்படியொரு உலக வரலாறு இருப்பதைப் படிக்கும்போது வியப்பின் எல்லைக்கே சென்றுவிடுகிறோம். உணவு சரித்திரம் பற்றிய நூலாயினும் இடையிடையே, குட்டிக் கதைகள், பழந்தமிழ் பாடல் வரிகள், பழமொழிகள், வரலாற்றுச் சான்றுகள், இன்றைய சினிமா பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இடம் பிடித்த ரொட்டி இன்றைக்கு உலகில் உள்ள எல்லா இன மக்களோடும், கலாசாரத்தோடும் வேரூன்றி இருப்பதை ஒரு சில பக்கங்களில் எடுத்துரைக்க நூலாசிரியர் எடுத்துக் கொண்டுள்ள முயற்சியும், உழைப்பும் நூலைப் படிக்கும்போது தெரிகிறது. புத்தக வடிவமைப்பில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ள படங்களும், கண்ணுக்குச் சோர்வு ஏற்படுத்தாத எழுத்துருவும் புத்தகத்திற்கு வலிமை சேர்க்கின்றன. ஒருசில பக்கங்களில் இடம்பெற்றுள்ள சுட்டிக்காட்டும் வரிகளில் காணப்படும் எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். மாம்பழ வரலாற்றில் மாயவரம் பாதிரிப் பழத்தின் பெயரையும், பலாப்பழ வரலாற்றில் பண்ருட்டி பலாப்பழத்தின் பெயரையும் விட்டு விட்டாரே நூலாசிரியர் என்ற ஆதங்கம் இருந்தாலும், தமிழில் அரிய தகவல்களை உள்ளடக்கிய இத்தகைய நூல்கள் இன்னும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. நன்றி: தினமணி, 24/8/2015.