சோபியின் உலகம்
சோபியின் உலகம், தமிழில் ஆர். சிவகுமார், காலச்சுவடு பதிப்பகம்.
மகளுக்கு தந்தையின் பிறந்த நாள் பரிசு நார்வே மொழியில் யோஸ்டைன் கார்டர் எழுதி, ஆங்கிலத்துக்கு வந்து, தமிழில் ஆர்.சிவகுமார் மொழியாக்கம் செய்து, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள, சோபியின் உலகம் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். நாவல் 19955ல் வெளியானபோது, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. ஆங்கிலத்தில், திரைப்படமாகவும் வந்துள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்காக, இந்த ஆண்டின் தமிழ் பேராய விருதைப் பெற்றுள்ளது. நார்வே நாட்டில் நடக்கும் இந்த கதையின் நாயகி சோபி. அவரது தந்தை ஐ.நா., சபை தூதராக வெளிநாட்டில் பணியாற்றுகிறார். 14 வயது சிறுமியான மகளின் பிறந்த நாளுக்கு, பரிசு அனுப்புகிறார். அந்த பரிசு, அவர் எழுதிய ஒரு கதை. அந்த கதையை, யாருக்கும் தெரியாமல் அவள் மட்டும் படிக்க வேண்டும் என்பது, அவரது கட்டளை. அதற்கு ஏற்றாற்போல் வெளிநாட்டில் இருந்து, தபாலும் அவளுக்கு வருகிறது. பள்ளி மாணவியான அவள், தனியாக அந்த கதையைப் படிப்பதன் மூலம் அவளுக்கு ஏற்படும் மாற்றங்கள், கதைக்குள் ஒரு கதையாக விரிகிறது. சிறுமிக்கு எழுதப்பட்ட கதை என்றாலும், பெரியவர்களும் படிக்க வேண்டிய நாவல். மகளுக்கு பல்வேறு தத்துவங்களை தந்தை சொல்கிறார். ஆல்பர்ட் நாக்ஸ் என்ற தத்துவ ஞானியை அறிமுகம் செய்து, அவரை சந்திக்கும் படியும்கேட்டுக் கொள்கிறார். தந்தையின் அறிவுரையை ஏற்று, ஆல்பர்ட் நாக்சை, சோபி சந்திக்கிறாள். அவர் மூலம் பல்வேறு விஷயங்களை அவள் அறிகிறாள். அவர்களுக்கு இடையேயான நட்பு, ஆசிரியர் – மாணவி என்ற எல்லையைத் தாண்டி செல்வதுபோல் தோன்றும். தந்தை அனுப்பிய கதையை படிப்பதாலும்,அதில் கூறப்பட்டுள்ளபடி நடந்து கொள்வதாலும், சோபியின் பள்ளிப் படிப்பிலும் சில தாக்கங்கள் ஏற்படுகின்றன. இறுதியில், வீடு திரும்பும் தந்தையும் மகளும் இணைந்து அந்த கதையின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு கதை முடிகிறது. வாழ்வின் சிக்கல் கண்டு அயர்ந்துவிடாமல், தொடர்ந்து செயல்படும்போது, சிக்கல்கள் தானாக விலகும் என்பதை, சோபியின் உலகம் சொல்கிறது. -எத்திராஜ் அகிலன். எழுத்தாளர். நன்றி:தினமலர், 20/9/2015.